Images
  • handphone
    படம்: REUTERS/Robert Galbraith

ஆண் மாணவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தோனேசிய மாணவி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இந்தோனேசியாவில் ஆண் மாணவருக்குக் கைத்தொலைபேசி வழி பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பிய 13 வயது மாணவி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மத்திய ஜாவா (Central Java) வட்டாரத்தைச் சேர்ந்த SMP IT Nur Hidayah எனும் இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவத்தைப் பற்றி The Jakarta Post தெரிவித்துள்ளது.

ஆண் நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறியது உள்படப் பள்ளியின் பல்வேறு விதிமுறைகளைச் சிறுமி மீறியதாகத்  தெரிவிக்கப்பட்டது.

மேல் விவரங்கள் அளிக்கப்படவில்லை என்றபோதும், ஆண் நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறுவது பள்ளியைவிட்டு நீக்கும் அளவுக்குக்  கடுமையான விதிமீறல் என்று கூறப்பட்டுள்ளது.

தெளிவான காரணம் இல்லாமல் சிறுமியைப் பள்ளியைவிட்டு வெளியேற்றியதைச் சாடியுள்ளது அந்நாட்டுச் சிறார் பாதுகாப்பு ஆணைக்குழு.

சிறுமியின் கல்வி உரிமையை மீறும் செயல் இதுவென்று குறிப்பிட்ட குழு, அடுத்துச் சேரும் புதிய பள்ளியில் அவர் ஒதுக்கப்படக்கூடும் என்றும் வருத்தம் தெரிவித்தது.

எதிர்ப் பாலின மாணவர்களோடு எப்படிப் பழக வேண்டுமென்பது குறித்துப் பள்ளி நிர்வாகம், மாணவிக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கலாமென்று ஆணைக்குழு குறிப்பிட்டது.


Top