Images
  • flyover collapses (1)
    (படம்: AFP)

இந்தியா: மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி; இன்னும் சிலர் அதனடியில் சிக்கிக்கொண்டுள்ளனர்

இந்தியா: வாரணாசி நகரில் நேற்று (மே 15) மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் குறைந்தது 18 பேர் மாண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

வாகனங்களுடன் மேலும் சிலர் அதனடியில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்று மீட்புப் பணி அதிகாரி ஒருவர் கூறினார்.

இடிபாடுகளின் அடியில் அகப்பட்டோரை மீட்பதற்கான பணிகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன.

எத்தனை பேர் சிக்கிக்கொண்டுள்ளார்கள் எனும் விவரம் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இன்னும் கட்டி முடிக்கப்படாத மேம்பாலச் சாலையின் ஒரு பகுதி கீழே உள்ள சாலையில் இடிந்து விழுந்து கார்களையும் பேருந்துகளையும் நசுக்கியதாகச் சம்பவத்தைப் பார்த்த ஒருவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றி விசாரிக்க, மூன்று உறுப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது தொகுதியில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த கவலையடைவதாகத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச அரசாங்கம் நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டோருக்கு எல்லா உதவியையும் வழங்கி வருவதாகவும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.  

Top