Images
  • Fukushima
    (படம்: REUTERS/Issei Kato/File Photo)

ஃபுக்குஷிமா கதிரியக்கத் தன்மை கொண்ட நீரை பசிபிக் பெருங்கடலில் கொண்டு சேர்க்க வேண்டும்: ஜப்பானியச் சுற்றுப்புற அமைச்சர்

தோக்கியோ மின்சக்தி நிறுவனம், அதன் சேதமுற்ற ஃபுக்குஷிமா (Fukushima) அணுமின் நிலையத்திலிருந்து வெளியாகும் கதிரியக்கத் தன்மை கொண்ட நீரை பசிபிக் பெருங்கடலில் நேரடியாகக் கொண்டுசேர்க்கும் என்று ஜப்பானியச் சுற்றுப்புற அமைச்சர் கூறியிருக்கிறார்.

2011ஆம் ஆண்டு நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் அந்த அணுமின் நிலையம் சேதமுற்றது.

அங்கிருந்து ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான மாசடைந்த தண்ணீரை நிறுவனம் தொட்டிகளில் சேகரித்துவருகிறது.

இன்னும் மூவாண்டில் இடப் பற்றாக்குறை ஏற்படும் என்று அது கூறியது.

அதன் பிறகு, மாசடைந்த நீரைக் கடலில் விடுவது மட்டுமே எஞ்சியிருக்கும் வழி என்று திரு. யொஷியாக்கி ஹராடா (Yoshiaki Harada) கூறினார்.

அந்தத் தண்ணீரை அகற்றும் வழிகள் பற்றிய வல்லுநர் குழுவின் ஆய்வறிக்கைக்காக அரசாங்கம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வளவு நீர் பெருங்கடலில் கொட்டப்படும் என்று திரு. ஹராடா விவரம் தரவில்லை.

நிறுவனமும் அதுபற்றிக் கருத்துரைக்கவில்லை.

ஆனால் ஜப்பான் அவ்வாறு கதிரியக்க மாசுபட்ட நீரைக் கடலில் கொட்டினால், பக்கத்து நாடுகளான தென் கொரியா போன்றவற்றை அது சினமூட்டக்கூடும்.

கரையோர அணுமின் நிலையங்கள் 'டிரிட்டியம்' எனும் தாதுப்பொருள் கலந்த நீரைக் கடலில் கொட்டுவது வழக்கம். 'டிரிட்டியம்' ஆபத்தான பொருளாகக் கருதப்படவில்லை. ஆனால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து வெளியாகும் தண்ணீரில் டிரிட்டியம் மட்டுமின்றி வேறுசில தாதுக்களும் கலந்திருப்பதாய்க் கூறப்படுகிறது.
 

Top