சீனா: பள்ளி செல்லும் மாணவியைக் கொன்ற நாய்கள்
சீனாவின் வடக்குப் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் வழியில் இரு நாய்களால் தாக்கப்பட்ட ஒன்பது வயதுச் சிறுமி மாண்டார்.
கிராமப்புறத்திலுள்ள நடைபாதையில் தனியாக நடந்துசென்ற சிறுமியைப் பண்ணையில் வளர்க்கப்படும் அந்த நாய்கள் தாக்கியதாக South China Morning Post தெரிவித்துள்ளது.
நாய்கள் சிறுமியின் கழுத்தைத் தாக்குவதைக் கண்டு அவ்வழியே சென்ற மாணவர்கள் உதவி நாடிப் பள்ளிக்குச் சென்றனர்.
சிறுமியின் அக்கா உதவ முயன்றிருக்கிறார். அது பலன் அளிக்காததால் வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்துவந்திருக்கிறார்.
பெற்றோர் நாய்களைத் துரத்தி மகளை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
ஆனால் சிறுமி அங்கு மாண்டார். அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் வளர்த்துவந்தவை அந்த நாய்கள்.
அவை வீட்டைவிட்டுத் தப்பியது தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். நாய்கள் தற்போது காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளன.
சம்பவம் குறித்துக் காவல்துறை குற்றவியல் விசாரணையத் தொடங்கியுள்ளது.