Images
  • hk (1)
     (படம்: AFP/ISAAC LAWRENCE)

ஹாங்காங் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், மாணவர்கள் நால்வர் கைது

ஹாங்காங் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், மாணவர்கள் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாலைகளில் ஆர்ப்பாட்டம் ஏதும் நடக்காத நிலையில், முதன்முறை, அரசாங்க எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"ஹாங்காங் நாட்டை" உருவாக்குவதன் தொடர்பில் போராட இணையத்தில் அவர்கள் குழுவை அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

பிரிவினைவாதச் செயல்களை ஒருங்கிணைத்துத் தூண்டிவிட்ட குற்றச்சாட்டின்பேரில், மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண். நால்வரும் 16 லிருந்து 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஹாங்காங் காவல்துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Yuen Long, Sha Tin, Tuen Mun ஆகிய வட்டாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர், சென்ற மாதம் 30 ஆம் தேதி ஜனநாயக ஆதரவு அமைப்பான உள்ளூர் மாணவர் குழு கலைக்கப்பட்டது.

பிரிவினைவாதம், பயங்கரவாதம், வெளிநாட்டு உதவியுடன் குழப்பம் விளைவித்தல் போன்றவற்றைத் தடுப்பதே புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.  

Top