Images
  • hk maid
    (படம்:AFP/Peter Parks)

ஹாங்காங்கில் இல்லப் பணிப்பெண்களுக்குத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குவது நியாயமல்ல என்று குறைகூறும் தொழிலாளர் குழுக்கள்

ஹாங்காங்கிலுள்ள இல்லப் பணிப்பெண்கள் அனைவருக்கும், தடுப்பூசி போடும் திட்டத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற அறிவிப்பை, வெளிநாட்டு ஊழியர்நலக் குழுக்கள் சாடியுள்ளன.

அது "பாகுபாடு காட்டும் நியாயமற்ற நடவடிக்கை" என அவை குறைகூறின.

அங்குள்ள 370,000 பணிப்பெண்களில் பெரும்பாலோர் பிலிப்பீன்ஸ், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

புதிதாக வேலை அனுமதிக்கு விண்ணப்பிப்போரும், பழைய அனுமதியைப் புதுப்பிப்போரும், தங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அதிகாரிகளிடம் உறுதிப்படுத்த வேண்டும்.

தங்களைப் போன்ற அதே சூழலில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஹாங்காங்வாசிகளுக்கும் தடுப்பூசி கட்டாயமில்லை என்பதை, பணிப்பெண்கள் சுட்டினர்.

ஆனால், போதுமான காரணமின்றித் தங்களை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்டாயப்படுத்துவது நியாயமில்லை என்று அவர்கள் கூறினர்.

ஆனால், பணிப்பெண்கள் வெளிநாட்டிலிருந்து வருவதாகவும் அவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மூத்தோரைப் பராமரிப்பவர்கள் என்றும், ஹாங்காங் தொழிலாளர் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ஓய்வு நாளன்று பெருங்கூட்டமாகக் கூடுவதால் கிருமி தொற்றும் ஆபத்து அவர்களுக்கு அதிகம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதனால், தடுப்பூசியைப் பணிப்பெண்களுக்குக் கட்டாயமாக்குவது சரிதான் என்றார் அவர்.

அவரது அந்தக் கருத்து அதிர்ச்சியளிப்பதாக, அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்நலக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

ஹாங்காங்கில் இல்லப் பணிப்பெண்கள் இருவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கட்டாயத் தடுப்பூசி குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

வரும் நாள்களில், இல்லப் பணிப்பெண்கள் அனைவருமே, கிருமித்தொற்றுக்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் ஏழரை மில்லியன் மக்கள்தொகையில் 12 விழுக்காட்டினர் மட்டுமே இதுவரை ஒருமுறை அல்லது அதற்கும் மேல் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

Source: AFP/zl
 

Top