Images
  • hongkong
     (படம்: AP/Vincent Yu)

ஹாங்காங்: சட்ட விரோதமாகக் கூடிய 53 பேர் கைது

ஹாங்காங்கில் சட்ட விரோதமாகக் கூடியதன் தொடர்பில் 53 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கௌலூன் (Kowloon) வட்டாரத்திலுள்ள ஜோர்டனிலிருந்து மொங் கோக் வரை நடத்தப்பட்ட பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணையத்தில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பேரணி தொடங்குவதற்கு முன்பே, கலவரத் தடுப்புக் காவலர்கள் அந்த வட்டாரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்டனர்.

அமைதிப் பேரணியாக நடைபெறத் திட்டமிட்டபோதும், அதில் பங்கேற்றவர்களில் பலர், காவல்துறையினரைப் பார்த்து முழக்கமிட்டனர். கலைந்து செல்லுமாறு மக்களிடம் காவல்துறையினர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில் சிறு மோதல் ஏற்பட்டது. கண் எரிச்சலை ஏற்படுத்தும் தெளிப்பான்களை அதிகாரிகள் பயன்படுத்தினர்.

சீனாவின் உச்ச ஆட்சி மன்றக் குழு, ஹாங்காங்குக்கான பாதுகாப்புச் சட்ட நகலை ஆராய்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமைக்குள் அந்தச் சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங்கின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  

Top