Images
  • blacksheep restaurant
    (படம்: Facebook/Black Sheep Restaurants)

வெளிநாட்டு ஊழியர்களைச் சொந்த நாடு அனுப்புவதற்கு 650,000 டாலர் செலவிடத் திட்டமிடும் ஹாங்காங் உணவகக் குழுமம்!

ஹாங்காங்கிலுள்ள ஓர் உணவகக் குழுமம், அதன் வெளிநாட்டு ஊழியர்கள் தாய்நாடு செல்லும் வாய்ப்பை வழங்குவதோடு அதற்கான பண உதவியையும் அளிக்கிறது!

Black Sheep Restaurants குழுமம், அதற்கான ஏற்பாட்டுச் செலவுக்குச் சுமார் 650,000 டாலர் அளிக்கவும் தயாராக உள்ளது.

அந்த உணவகக் குழுமத்தின்கீழ் சுமார் 250 பேர் வெளிநாடுகளில் உள்ள அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்க வாய்ப்பளிக்கிறது Black Sheep.

குழுமத்தின் 32 உணவகங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் கிருமிப்பரவலால் சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை அவர்களது குடும்பத்தினரை நேரடியாகச் சந்திக்கவில்லை என்று நம்பப்படுகிறது.

பொதுவாக, இவ்வேளையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுவோர் - கிருமிப் பரிசோதனைகள், ஊதியமில்லாத விடுப்பு, தனிமைப்படுத்திக்கொள்ள ஹோட்டல் போன்றவற்றுக்கு அதிக அளவில் பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் அதன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Black Sheep உணவகக் குழுமம் அத்தகைய பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான பணம் அளிக்கும் என்று கூறியுள்ளது.

அதற்கு ஒரேயொரு நிபந்தனையை மட்டுமே குழுமம் முன்வைத்துள்ளது... தாயகம் செல்லும் அதன் ஊழியர்கள் மீண்டும் விடுப்பிலிருந்து வேலைக்குத் திரும்பும்போது, ஓராண்டு காலத்திற்குப் பணிபுரியவேண்டும்!  

Top