Images
  • nursing home
    படம்: REUTERS/Michael Kooren

ஹாங்காங்கில், மருத்துவமனையைக் காட்டிலும் அந்திமக்காலப் பராமரிப்பு இல்லத்தில் மாண்டு போவோருக்கான செலவு குறைவு

ஹாங்காங்: அந்திமக்காலப் பராமரிப்புச் செலவு, மருத்துவமனைகளுடன் ஒப்பிடுகையில் பராமரிப்பு இல்லங்களில் குறைவு.

அந்திமக் காலப் பராமரிப்பு இல்லங்களில் தங்கி மாண்ட முதியோருக்கான செலவு, மருத்துவமனைக்குச் சென்று மாண்ட முதியோரைக் காட்டிலும் மிகக் குறைவு.

ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே அவர்களுக்குச் செலவானது என்பது அண்மை ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.  மூத்தோர் நல ஆணையமான Haven of Hope Christian Service அந்த ஆய்வை நடத்தியது.

169 மூத்தோர் ஆய்வில் பங்கேற்றனர். முதியோரின் இறுதி ஆண்டில் அவர்களுக்கான செலவு, மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள், ஆய்வின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இறுதியில், மருத்துவமனையில் மாண்ட முதியோரைக் காட்டிலும் அந்திமக் காலப் பராமரிப்பு இல்லத்தில் மாண்ட முதியோருக்கு, 66,080 ஹாங்காங் டாலர் குறைவாகச் செலவானது.

அதனையடுத்து, அந்திமக் காலப் பராமரிப்பு இல்லங்களுக்கான நிதியாதரவை அதிகரிக்கும் சாத்தியம் பற்றி அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

ஹாங்காங்கின் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது. 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய முதியோரின் எண்ணிக்கை, 2038ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகையில் சுமார் 30 விழுக்காட்டை எட்டுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த விகிதம் 17 விழுக்காடு. 


Top