Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்திய மருத்துவமனையில் உயிர்வாயுத் தொட்டிக் கசிவு - உயிர்வாயு விநியோகம் தடைபட்டு 24 பேர் மரணம்

இந்தியாவின் நாசிக் நகரில் உள்ள ஸாகிர் ஹுசைன் (Zakir Hussain) மருத்துவமனையில், உயிர்வாயுத் தொட்டியில் ஏற்பட்ட கசிவால் உயிர்வாயு கிடைக்காமல் மாண்டோர் எண்ணிக்கை 24க்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் நாசிக் நகரில் உள்ள ஸாகிர் ஹுசைன் (Zakir Hussain) மருத்துவமனையில், உயிர்வாயுத் தொட்டியில் ஏற்பட்ட கசிவால் உயிர்வாயு கிடைக்காமல் மாண்டோர் எண்ணிக்கை 24க்கு உயர்ந்துள்ளது.

அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த COVID-19 நோயாளிகள் என்று தெரியவந்துள்ளது.

இந்தியா இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலை முறியடிக்கப் போராடி வரும் சூழலில் அந்தத் துயரம் நேர்ந்திருக்கிறது.

கசிவு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு சுமார் அரை மணி நேரம் உயிர்வாயு விநியோகம் தடைபட்டதால், அவர்கள் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் 157 பேரில் 61 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு உயிர்வாயு தேவை என்று ஓர் அதிகாரி கூறினார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாண்டோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறிய அவர், மாண்டோரின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்கிடையே, இந்தியத் தலைநகரில் உயிர்வாயுக் கலன்களுக்கு நிலவும் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசாங்கத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உயிர்வாயு கிடைக்காமல் மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது, தொழிற்சாலைகளுக்கு உயிர்வாயு விநியோகம் செய்யப்படுவது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இன்னும் சில மணி நேரம் பயன்படுத்தப் போதுமான உயிர்வாயு மட்டுமே கையிருப்பில் உள்ளதாக புதுடில்லியில் உள்ள சில மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன

- Reuters  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்