Images
  • indian businessman (1)
    (படம்: AFP)

ஏழை மக்களுக்காக அலுவலகத்தைக் கிருமித்தொற்றுச் சிகிச்சை இடமாக மாற்றிய தொழிலதிபர்

கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த ஓர் இந்தியத் தொழிலதிபர், தமது அலுவலகத்தைக் கிருமித்தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றியுள்ளார்.

அங்கு 85 படுக்கைகள் உள்ளன.

திரு. காதர் ஷேக் சென்ற மாதம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மருத்துவக் கட்டணங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

"ஏழை மக்களால் எப்படி இவ்வளவு பணம் கொடுத்து சிகிச்சை பெற முடியும்?" என்ற வினா அவருக்கு எழுந்தது.

பொது மருத்துவமனைகளோ கிருமித்தொற்றுச் சம்பவங்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

அதனால், கிருமித்தொற்றை முறியடிப்பதற்குத் தம்மாலான பங்கையாற்ற முன்வந்ததாகத் திரு. ஷேக் கூறினார்.

உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிய பின், தமது 30,000 சதுர அடி அலுவலக இடத்தைக் கிருமித்தொற்றுச் சிகிச்சை இடமாக மாற்றினார்.

படுக்கைகள், மெத்தை உறைகள், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கான செலவை அவர் ஏற்றுக்கொண்டார்.

மருத்துவக் கருவிகள், மருந்து, ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை அரசாங்கம் வழங்குகிறது.

எந்தவித பேதமுமின்றி நோயாளிகள் இலவச சிகிச்சைக்கு அந்த மருத்துவ நிலையத்தை அணுகலாம்.

Top