Images
  • Indian Man Hijack
    (படம்: REUTERS)

விமானத்தைக் கடத்தவுள்ளதாக போலி மிரட்டல் - இந்திய ஆடவருக்கு ஆயுள்தண்டனை


இந்தியா: விமானத்தைக் கடத்துவதாகக் குறிப்பிடும் போலிக் குறிப்பு ஒன்றைக் கழிப்பறையில் விட்டுச்சென்ற இந்திய ஆடவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லியிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த அந்த Jet Airways விமானத்தைக் கடத்துவதாக போலி மிரட்டல் விடுத்ததற்காக பிர்ஜு சல்லாவுக்கு 50 மில்லியன் ரூபாய் (983,924 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

BBC வெளியிட்ட தகவலின்படி சம்பவம் 2017 அக்டோபரில் நடந்தது.

Jet Airwaysஇல் விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துவந்த ஒரு பெண்ணுடன் கள்ள உறவில் இருந்தார் சல்லா.

காதலியைத் தன்னோடு மும்பையில் வாழ அழைத்து இருக்கிறார் சல்லா.

ஆனால் காதலி மறுத்திருக்கிறார்.

டில்லியிலிருந்து கிளம்பிய Jet Airways விமானம் கடத்தப்படும் சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டால் நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்படும். அதன்பின் நிறுவனம், டில்லியில் அதன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும், வேலையை இழக்கும் தன்னுடைய காதலி தன்னுடன் வந்து வாழ ஒப்புக்கொள்வார் என்றும் சல்லா நம்பினார்.

அதனால், விமானத்தைக் கடத்த 12 பேர் அதில் காத்துக்கொண்டிருப்பதாகவும் சில வெடிகுண்டுகள் விமானத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கும் குறிப்பு ஒன்றை, மும்பையிலுள்ள தமது அலுவலகத்தில் எழுதி வைத்துக்கொண்டார் சல்லா.

பின்னர், விமானத்தில் பயணம் செய்யும்போது அந்தக் குறிப்பைக் கழிப்பறையில் விட்டுச் சென்றார்.

விமானம், POK எனப்படும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிக்குத் திருப்பிவிடப்பட வேண்டுமென்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாக, BBC தெரிவித்தது.

விமானம் அகமதாபாதில் அவசரமாகத் தரையிறங்கியது.

கடத்தலுக்கு எதிராக இந்தியாவில் நடப்புக்கு வந்திருக்கும் சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படும் முதல் நபர் சல்லா.

கடிதம் போலியானதாக இருந்தாலும் இந்தியச் சட்டத்தின்படி சல்லா விமானத்தைக் கடத்த முயன்றதாகவே கருதப்படும் என்று புலனாய்வாளர் ஒருவர் கூறினார்.

சல்லா செலுத்தும் அபராதத் தொகையை, விமானிகள், விமானப் பணிப்பெண்கள், விமானப் பயணிகளுக்குப் பகிர்ந்து கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சல்ல, தீர்ப்பை எடுத்து மேல்முறையீடு செய்ய திட்டமிடுவதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.  

Top