Images
  • Indo virus
    படம்: Antara Foto/Aswaddy Hamid/ via REUTERS

கொரோனா கிருமித்தொற்றுப் பற்றி மறைக்கவேண்டிய அவசியமில்லை: இந்தோனேசியா

இந்தோனேசியா, கொரோனா கிருமித்தொற்றின் தொடர்பில் வெளிப்படையாய் நடந்துகொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரவான் அகுஸ் புத்ரான்ட்டோ கூறியுள்ளார்.

கிருமித்தொற்றைக் கண்டுபிடிப்பதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட சாதனங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

இதுவரை எந்த கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவமும் அங்கு பதிவாகவில்லை.

ஆயினும் சில சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கக்கூடும் என ஹார்வர்டு மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்று அதன் சுற்றுப்பகுதிகளிலும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து, வியட்நாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட மற்ற வட்டார நாடுகளிலும் பரவியுள்ளது.

இருப்பினும் 260 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் இதுவரை யாருக்கும் கொரோனா கிருமி தொற்றியதாகத் தகவல் இல்லை.

இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றியதாகச் சந்தேகிக்கப்பட்ட 64 பேருக்கு அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அவர்களில் 62 பேருக்குக் கிருமி தொற்றவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும் இருவர், பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.  

Top