Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒரு நாளாக இருந்தாலும் பரவாயில்லை என்று மாநில எல்லைகளைக் கடந்து பயணம் செய்யும் மலேசியர்கள்

மலேசியாவில் கடந்த திங்கட்கிழமை (11 அக்டோபர்) முதல், மாநில எல்லைகளைக் கடந்து பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் கடந்த திங்கட்கிழமை (11 அக்டோபர்) முதல், மாநில எல்லைகளைக் கடந்து பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

மலேசியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 90 விழுக்காட்டினருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்ட பின்னர் மாநில எல்லைகள் திறந்துவிடப்படும் என மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யக்கோப் முன்னர் அறிவித்திருந்தார்.

COVID-19 பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியா முழுமைக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், மாநில எல்லைகளைக் கடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வைப் பயன்படுத்திக் கொண்டு பலர் தங்கள் பெற்றோர், கணவர், மனைவி, உயர்கல்வி பயிலும் பிள்ளைகள் ஆகியோரைச் சந்திக்க மாநில எல்லைகளைக் கடந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோலாலம்பூரிலேயே விற்பனை ஆலோசகராகப் பணிபுரியும் யாஸ்மின் அஃபாண்டி,
தமது குடும்பத்தாரைப் பார்க்க சொந்த ஊரான ஜொகூருக்குச் சென்றார்.

பணி நெருக்கடியால், யாஸ்மின் ஓர் இரவை மட்டுமே தமது குடும்பத்தாருடன் கழிக்க முடிந்தது.

அதற்காகத் திங்கட்கிழமை காலை 180 கிலோ மீட்டர் தூரம் விரைவுப் பேருந்தில் சென்று, மூவார் நகரை அடைந்து, பின்னர் மறுநாள் காலையில் முதல் பேருந்தில் மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்பியிருக்கிறார்.

(படம்: CNA)

கடந்த சில நாள்களாக கோலாலம்பூரின் முக்கிய பேருந்து முனையமான பண்டார் தாசேக் செலாத்தானில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஜொகூர் பாருவில் லார்க்கின் பேருந்து முனையத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் நெரிசலாக இருக்கிறது.

பயணச் சீட்டு விற்பனை முகப்புகளில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.

வெளிப்புறத்தில் வாடிக்கையாளர்களுக்காக வாடகை வாகனங்களும் காத்திருக்கின்றன.

வாரயிறுதிக்கான பேருந்துப் பயணச் சீட்டுகள் மளமளவென்று விற்றுத் தீர்வதாக பயண முகவர் நிறுவனங்கள் தெரிவித்தன.

ஜொகூர் பாருவில் பணி புரிந்து வரும் முகம்மட் ஃபிர்டாவுஸ் இஸ்மாயில் தமது சொந்த மாநிலமான பாகாங்கிற்குச் செல்ல ஆயத்தமானார்.

கடந்த ஓராண்டாக தமது மனைவியையும் 10 மாத மகனையும் பிரிந்து வாழும் அவருக்கு, அது மிகவும் கடுமையானக் காலமாக இருந்தது.

தற்போதைய தளர்வை மனத்தில் கொண்டு நிறுவனங்களும் நீக்குப்போக்காக நடந்துகொள்கின்றன.

மாநில எல்லைகளைக் கடந்து செல்லத் தடை நீக்கப்பட்டதும் முதலாளி 2 வார விடுமுறை கொடுத்திருப்பது அவரது நல்ல மனத்தைக் காட்டுகிறது.

என்றார் ஃபிர்டாவுஸ்.

வாடகை வாகன ஓட்டுநர் முகம்மட் ஷாஃபி அப்பாண்டி தமது முழு நாளையும் வாடிக்கையாளர்களுக்காகச் சேவையாற்றுவதில் கழிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கு முன் இருந்தது போல, அன்றாடம் காலையில் பேருந்து முனையத்தில் எனது பணியைத் தொடங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

பிரிந்த உறவுகள், பார்க்க முடியாமல் இருந்த சொந்தங்கள், இணையம் வாயிலாக மட்டுமே சந்தித்த நண்பர்கள் -
மாநில எல்லைகள் திறக்கப்பட்டிருப்பது இப்படிப் பல தரப்பினருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்