Images
  • Jakarta Pollution
    (படம்: AFP/Bay Ismoyo)

ஜக்கர்த்தா நகரக் காற்றுத்தரம் ஆரோக்கியமான அளவிலேயே உள்ளது-இந்தோனேசிய சுற்றுப்புற அமைச்சர்


ஜக்கர்த்தா நகரக் காற்றுத்தரம் இன்னமும் ஆரோக்கியமான அளவிலேயே உள்ளதாக, இந்தோனேசியாவின் சுற்றுப்புற, வனத்துறை அமைச்சர் சிட்டி நூர்பயா பக்கர் (Siti Nurbaya Bakar) கூறியிருக்கிறார்.

தேசியத் தரநிலையின்படி, காற்றுத்தரம் இன்னமும் நல்ல நிலையில்தான் உள்ளது என்றார் அவர்.

Air Visual எனப்படும் சுயேச்சையான இணையக் காற்றுத்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டை அவர் நிராகரித்தார்.

சென்ற மாதம் 25ஆம் தேதி நிலவரப்படி, ஜக்கர்த்தா நகரக் காற்றுத்தரக் குறியீடு, 231 என்னும் மிக ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததாக அது குறிப்பிட்டிருந்தது.

அது, அமெரிக்கச் சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம்.

ஜக்கர்த்தா நகரக் காற்றுத்தரம், புதுடில்லி, பெய்ச்சிங் நகரக் காற்றுத் தரத்தைக் காட்டிலும் மோசமானது என்று Air Visual குறிப்பிட்டிருந்தது.

அது, இந்தோனேசிய சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியது.

ஆனால், தேசியத் தரநிலையின்படி ஜக்கர்த்தா நகரக் காற்றுத்தரம் நல்ல நிலையிலேயே உள்ளதாகத் திருமதி சிட்டி நூர்பயா குறிப்பிட்டார்.

ஜக்கர்த்தா நகரக் குடியிருப்பாளர்கள் 31 பேர், காற்றுத்தரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

அதிபர் ஜோக்கோ விடோடோ, ஜக்கர்த்தா ஆளுநர்-ஆகியோருக்கு எதிராகவும், சுற்றுப்புற, சுகாதார அமைச்சுகளுக்கு எதிராகவும் அவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

காற்றுத் தூய்மைக் கேடு உண்மையான பிரச்சினை என்பதை ஒப்புக் கொண்டு அதற்குத் தீர்வுகாண அரசாங்கம் முன்வர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

Top