Images
  • japan
    (படம்: AFP/Kazuhiro Nogi)

கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தவிருக்கும் ஜப்பான்

ஜப்பானிய அரசாங்கம், வெளிநாட்டு ஊழியர்களைக் கூடுதல் எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தும் சட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிப்பது நோக்கம்.

அந்தச் சட்டம் அவசரமாக வரையப்பட்டதாகவும், ஊழியர்கள் ஏமாற்றப்பட வழிவகுக்கும் என்றும் எழுந்த குறைகூறல்களை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.

புதிய சட்டம், ஜப்பானிய அரசாங்கக் கொள்கைகளில் அது மிகப் பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

ஜப்பானின் மூப்படையும் மக்கள்தொகையால் ஏற்பட்ட நெருக்குதலால் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்கள் விவகாரத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறது.

புதிய சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடப்புக்கு வரும். அதன்பிறகு, இரு பிரிவுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படுவர்.

முதல் பிரிவில், ஐந்தாண்டு வரை வேலை-அனுமதி உண்டு;ஆனால் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை.

இரண்டாவது பிரிவு, மேம்பட்ட திறனாளர்களுக்கானது. அவர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்கவும், பின்னர் குடியுரிமை பெறவும் வகைசெய்யப்படும்.

அடுத்த 5ஆண்டுகளில், மொத்தம் சுமார் 345ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவர் என்று ஜப்பானிய அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 

Top