Images
  • LG
    (கோப்புப் : REUTERS/Kim Hong-Ji/File Photo)

திறன்பேசித் தயாரிப்பைக் கைவிடும் LG நிறுவனம்

தென் கொரியாவின் LG மின்னியல் நிறுவனம், திறன்பேசித் தயாரிப்பைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

திறன்பேசிச் சந்தையிலிருந்து வெளியேறும் முதல் மிகப் பெரிய நிறுவனம் அது.

நிறுவனம், திறன்பேசித் தயாரிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக பலத்தை நட்டத்தைச் சந்தித்துவருகிறது.

கடந்த சுமார் 6 ஆண்டுகளில், அதன் மொத்த நட்டம் 4.5 பில்லியன் டாலரை எட்டியது.

நிறுவனத்தை விற்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

வட அமெரிக்க நாடுகளில் மூன்றாவது ஆகப் பிரபலமான திறன்பேசி நிறுவனம் LG.

வட அமெரிக்காவில் விற்பனையாகும் திறன்பேசிகளில், LG நிறுவனத்தின் பங்கு 10 விழுக்காடு.

அந்தச் சந்தையைத் தற்போது அதன் போட்டியாளர்களான Samsung நிறுவனமும், Apple நிறுவனமும் கைப்பற்றும்.

LG நிறுவனம், மிகக் குறைந்ததுமுதல் நடுத்தரமான விலைகொண்டதுவரையிலான திறன்பேசிகளை விற்றுவருகிறது.

எனவே, பெரும்பாலும் அதன் இடத்தை, நடுத்தர விலை கொண்ட திறன்பேசிகளை அதிகம் தயாரிக்கும் Samsung நிறுவனம் கைப்பற்றவே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

கடுமையான போட்டித்தன்மையுள்ள திறன்பேசிச் சந்தையிலிருந்து வெளியேறினாலும், வளர்ச்சி காணும் தனது மற்ற பிரிவுகளில் கவனம் செலுத்தப்போவதாக LG தெரிவித்தது.

மின்னியல் வாகனப் பாகங்கள், தொடர்புக் கருவிகள், Smart Homes எனப்படும் தொழில்நுட்பத் திறன் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் நிறுவனம் முழுமையாக இறங்கவிருக்கிறது.

-Reuters 

Top