Images
  • mahathir (4)
    (படம்:  Bernama)

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் தற்போது முக்கியம் இல்லை : மலேசியப் பிரதமர்

கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் தற்போது மலேசியாவுக்கு முக்கியம் இல்லை என்று அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

மலேசியாவில் தற்போது இயங்கிவரும் ரயில் சேவைகளை மேம்படுத்துவதே முக்கியமான ஒன்று என்றார் டாக்டர் மகாதீர்.

அதிவேக இரயில் திட்டத்தால் பயண நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

பயணிகள், ரயில் நிலையத்துக்குச் செல்வதற்கு நேரம் செலவிட வேண்டியிருப்பதை அவர் சுட்டினார்.

பயணத் தொலைவு நீண்டதாக இருந்து, பயணிகளால் 2 முதல் 6 மணி நேரம்வரை மிச்சப்படுத்த முடிந்தால், அப்போது விரைவு ரயில் பயனுள்ளதாக இருக்குமென்றார் மலேசியப் பிரதமர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அதிவேக இரயில் திட்டத்தை 2020 ஆண்டு மே மாதம் வரை தள்ளிப்போடுவது தொடர்பான உடன்படிக்கையில், இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதால் ஏற்படும் இழப்புக்காக, சிங்கப்பூருக்கு 15 மில்லியன் வெள்ளி கொடுத்தது மலேசியா.

அதிவேக ரயில் திட்டம் 2031ஆம் ஆண்டு சேவையாற்றத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.  

Top