Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

திரு. நஜிப்புக்கு எதிராக மலேசிய அரசாங்க நிதியைக் களவாடியது, லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் : பிரதமர் மகாதீர்

1MDB நிதித் திட்டத்தின் தொடர்பில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராகப் புலனாய்வாளர்களிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக டாக்டர் மகாதீர் Reutersஇடம் கூறினார்.

வாசிப்புநேரம் -
திரு. நஜிப்புக்கு எதிராக மலேசிய அரசாங்க நிதியைக் களவாடியது, லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் : பிரதமர் மகாதீர்

(படம்:AFP/Mohd Rasfan)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக அரசாங்க நிதியைக் களவாடியது, லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

1MDB நிதித் திட்டத்தின் தொடர்பில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராகப் புலனாய்வாளர்களிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக டாக்டர் மகாதீர் Reutersஇடம் கூறினார்.

பொதுமக்களின் நிதியிலிருந்து பில்லியன் கணக்கான டாலரை முறைகேடாகப் பயன்படுத்தியதில் திரு. நஜிப்பிற்கு முக்கியப் பங்கிருப்பதாக டாக்டர் மகாதீர் சொன்னார்.

1MDB நிதி நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் திரு.நஜிப்.
அதற்கான முழுப்பொறுப்பு அவருடையது.
திரு. நஜிப்பின் கையெழுத்தின்றி எதுவும் செய்ய முடியாது. அனைத்து ஒப்பந்தங்களிலும் அவரின் கையெழுத்து இருப்பதை டாக்டர் மகாதீர் சுட்டினார்.

22 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பை வகித்த டாக்டர் மகாதீர் 2003 ஆண்டு பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து, 1MDB தொடர்பில் விசாரணை மீண்டும் தொடங்கியது. அதில் திரு.நஜிப்பின் ஈடுபாடு குறித்த விசாரணையும் ஆரம்பமானது.

4.5 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகை களவாடப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறை குறைகூறியிருக்கிறது. 700 மில்லியன் டாலர் திரு. நஜிப்பின் சொந்தக் கணக்கிற்குச் சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அவரையும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூரையும் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

வழக்கின் தொடர்பில் திரு. நஜிப்பின் மனைவி மீதும் விசாரணை நடத்தப்படும். பணத்தில் ஒரு பகுதி அவருக்குச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று பிரதமர் மகாதீர் கூறியிருக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் வழக்கின் தொடர்பில் முதல் கைது நடவடிக்கை இடம்பெறும் என நம்புவதாக டாக்டர் மகாதீர் கூறியிருக்கிறார்.

நீதிமன்றத்துக்குச் செல்லும்போது தெளிவான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவுள்ளார்.

திரு.நஜிப் தாம் தவறேதும் இழைக்கவில்லை என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்