Images
  • polis
    படம்: AFP/Manan Vatsyayana

மலேசியா: காவல்துறை அதிகாரி மீது காரை ஏற்ற முயன்ற 15 வயதுச் சிறுவன் தோள்பட்டையில் சுடப்பட்டான்

மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் காவல்துறை அதிகாரி மீது காரை ஏற்ற முயன்ற 15 வயதுச் சிறுவன் தோள்பட்டையில் சுடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சிறுவன் காவல்துறையிடம் இருந்து தப்பித்து காரில் செல்லும் போது அந்தச் சம்பவம் நடந்தது.

கெடாய் லாலாட் என்னும் பகுதியில் பின்னிரவு 3 மணிக்குச் சம்பவம் நடந்ததாக கிளந்தான் காவல்துறைத் தலைமையதிகாரி தெரிவித்தார்.

சிறுவன் காரை சாலையில் ஓட்டிவரும் போது காவல்துறையின் சுற்றுக்காவல் அணியினர் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

ஆனால் சிறுவன் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

அதன் பிறகு காரை துரத்திப் பிடித்த போது ஏற்பட்ட மோதலில் சிறுவன் சுடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

சம்பவத்தின் போது காரில் ஒரு பெண்ணும், 17வயது ஆடவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் காவல்துறையினரின் விசாரணையில் உள்ளனர்.
 

Top