Images
  • malaysia election
    (படம்: Sumisha Naidu)

"உங்கள் வாக்கு ரகசியமாக வைத்திருக்கப்படும்" - எதிர்த்தரப்பு

மலேசியா: புத்ராஜெயா நகரத்தில் எதிர்த்தரப்பினர் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மலேசியர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய அரசாங்கக் கட்டடங்கள் சூழ்ந்த இடத்தில் பிரசாரம் நடத்தப்பட்டது.

அங்கிருந்து வாகனம் ஓட்டிச் சென்றால், 5 நிமிடத்தில் மலேசியப் பிரதமரின் அலுவலகம்.

எதிர்த்தரப்பு நடத்திய கூட்டமாக இருப்பினும், அரசாங்க ஊழியர்கள் அந்தப் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.

அதோடு நிறுத்தாமல், பிரதமர் நஜிப் ரசாக்கின் படத்திற்கு எதிராய் முழங்கினர்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மேடை ஏறியதும், அவரை ஆதரித்துக் குரல் எழுப்பினர்.

பக்காட்டான் ஹரப்பானுக்கு இது போன்ற ஆதரவு புத்ராஜெயாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என டாக்டர் மகாதீர் தமது உரையில் குறிப்பிட்டார்.

வாக்காளர்கள் செலுத்தும் வாக்கு ரகசியம் என்பதால் அவர்கள் அஞ்சத் தேவையில்லை என்று கூட்டத்தில் பேசியவர்கள் கூறினர்.

டாக்டர் மகாதீர் போட்டியிட நினைத்த இடங்களில் புத்ராஜெயாவும் ஒன்று.

இறுதியாக அவர் லங்காவியில் போட்டியிட முடிவு செய்தார்.

22 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த போது புத்ராஜெயா நகரத்தை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

புத்ராஜெயாவின் பெரும்பாலான வாக்காளர்கள், அரசாங்க ஊழியர்கள் என்பதால் அவர்களின் ஆதரவு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.


 

Top