Images
  • Malaysia Covid1
    (கோப்புப் படம்: REUTERS)

COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த, மலேசிய மாமன்னர் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்

மலேசியாவில் COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மாமன்னர் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

நெருக்கடிநிலை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வரை அல்லது கிருமிப்பரவல் சூழலைப் பொறுத்து, அதற்கு முன்னர் வரை நீடிக்கும் என்று அரச மாளிகை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

கிருமிப்பரவல் அதிகரித்து வருவதால், மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு வார முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் முஹீதின் யாசின் நேற்று அறிவித்திருந்தார்.

உற்பத்தி, கட்டுமானம், வேளாண் ஆகிய அத்தியாவசியத் துறைகள் தொடர்ந்து செயல்படும்.

அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்படும். இருப்பினும், உணவுக் கடைகளிலிருந்து உணவு வாங்கிச் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து, நாள்தோறும் நோய்த்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அங்கு 135,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 500க்கும் அதிகமானோர் மாண்டனர்.

இன்று நள்ளிரவு நடப்புக்குவரும் முடக்கநிலை இம்மாதம் 26ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.  

Top