Images
  • Malaysia Fake News
    (படம்: Fandy Azlan/Department of Information/AFP)

பொய்த் தகவல்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சட்டத்தைக் கைவிட மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு


மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொய்த் தகவல்களுக்கு எதிரான சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய அந்தச் சட்டத்தின்கீழ் பொய்த் தகவல்களைப் பரப்புவோருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கமுடியும்.

அச்சுப் பிரதி முதல் சமூக ஊடங்கள் வரை எத்தகைய வழியிலும் பொய்ச் செய்திகளைப் பரப்புவோருக்கு 500ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சட்டத்தை நீக்க நாடாளுமன்றம் மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை அகற்ற சென்ற ஆண்டு வாக்களித்திருந்தனர்.

ஆனால் எதிர்த்தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள மேலவை அதைத் தடுத்து விட்டது.

ஆனால் மேலவை மசோதாவை ஒருமுறை மட்டுமே தடுக்க முடியும்.

அந்தச் சட்டம் சென்ற ஆண்டு, முன்னைய பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது.

தம் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் விதத்தில், எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் நோக்கில் திரு. நஜிப் அந்தச் சட்டத்தை அறிமுகம் செய்ததாக விமர்சகர்கள் குறைகூறிவந்துள்ளனர்.

1MDB விவகாரத்தின் தொடர்பில் ஏகப்பட்ட ஊழல் சர்ச்சைகள் அதிகம் பேசப்பட்ட நேரம் அது.

ஆனால் திரு. நஜிபும் அவரது நீண்டகாலக் கூட்டணியும் எதிர்பாரா விதமாகச் சென்ற ஆண்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

பொய்த் தகவல்களுக்கு எதிரான சட்டத்தைக் கைவிட உறுதிகூறிய ஒரு சீர்திருத்தக் கூட்டணி ஆட்சியமைக்க அது வழிவிட்டது.
 

Top