Images
  • 1 (18)
    படங்கள்: தனலெட்சுமி புவனேந்திரன்

கை இழந்த சக விநியோக ஓட்டுநருக்கு, வாகனம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த மலேசிய இளையர்கள்

'பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது' - குறள் எண் – 103

என்ன பலன் கிடைக்கும் என்று யோசிக்காமல் அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு, கடலை விடப் பெரியது என்பது குறளின் பொருள்.

அக்குறளுக்கு ஏற்ப, ஒரு கை இல்லாமல் சைக்கிளோட்டிக்கொண்டே உணவு விநியோகச் சேவையில் ஈடுபட்ட ஒருவருக்கு எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவிசெய்துள்ளது இந்திய இளையர் குழுவொன்று.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கிள்ளான், புக்கிட் திங்கி (Bukit Tinggi) வட்டாரத்தில் வசிக்கும் 33 வயது திரு. ராதா கிருஷ்ணன் FoodPanda நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

அவர் 6 வயதாக இருக்கும்போது தம்முடைய கையை இழந்தார்.

எங்கள் வீடு ரயில் தண்டவாளத்துக்கு அருகே அமைந்திருக்கும். ரயிலில் ஏறித் தாண்டிச் செல்வது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு. ஒரு முறை, நான் தடுமாறி விழுந்ததில் ரயில் சக்கரம் ஏறியதில் எனது வலது கை முற்றிலும் சிதைந்துபோனது

என்றார் திரு. ராதா கிருஷ்ணன்.

கை இல்லை; தன்னம்பிக்கை உண்டு

எனக்கு ஒரு கை இல்லை என்ற குறையே என்னுள் இருந்ததில்லை. என்னால் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்

என்று அவர் சொன்னார்.

ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் சைக்கிளை ஓட்டிக்கொண்டே உணவு விநியோக வேலையைச் செய்வார், திரு. ராதா கிருஷ்ணன்.

இருப்பினும், வேலை முடிந்து வீடு வந்ததும் அவருக்கு மிகவும் அசதியாக இருக்கும்....

திரு. ராதா கிருஷ்ணனின் நிலையைக் கண்ட சக ஊழியர்கள் அவருக்கு 3 சக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர்.


‘Bukit Tinggi Klang Food Panda Indian Riders’ எனும் WhatsApp உரையாடல் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஏறக்குறைய 200 இளையர்கள் சேர்ந்து, திரு. ராதா கிருஷ்ணனுக்கு மின்கலனில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சிறு வயதில் நிகழ்ந்த விபத்தில் தனது வலக் கையை இழந்த திரு.ராதா கிருஷ்ணன், சைக்கிளோட்டிச் சென்று வீடுகளுக்கு உணவு அனுப்பிவருவது பற்றி கேள்விப்பட்டதும் அவரைக் கண்டுபிடித்து, நிலைமையைக் கேட்டறிந்ததாகக் கூறினார், அதே FoodPanda நிறுவனத்தில் பணிபுரியும் திரு. உதயகுமார்.


திரு. உதயகுமார், 32

நேரில் கண்டபோது அவர் இருந்த நிலை என்னை இன்னும் வேதனைக்குள்ளாக்கியது. உடல் முழுக்க வியர்த்து, அவர் மிகவும் களைப்பாகக் காணப்பட்டார். அவரைப் பற்றி உரையாடல் குழுவுடன் பகிர்ந்தேன்

என்று ‘செய்தி’யிடம் கூறினார் திரு.உதயகுமார்.

குழுவில் இருந்த அனைவரும் தங்களால் இயன்ற பணத்தை உடனடியாக அனுப்பத் தொடங்கியதாக அவர் சொன்னார். இரண்டே நாளில் 4,700 ரிங்கிட் (1,528 வெள்ளி) திரட்டப்பட்டது.

அவர்கள் பின்னர், திரு.ராதா கிருஷ்ணனுக்கு மூன்று சக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்ததோடு, மீதமிருந்த தொகையையும் ரொக்கமாக ஒப்படைத்துவிட்டனர்.

திரு. ராதா கிருஷ்ணனின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அவரது முக மலர்ச்சியைக் கண்டதும் எங்களது கண்களும் ஆனந்தத்தில் நனைந்தன.

என்று திரு. உதயகுமார் கூறினார்.

திரு. ராதா கிருஷ்ணனுக்குப் புதிய வாகனத்தை வாங்கித் தந்த பின்னர், பலரும் தங்களுடைய குழுவைப் பாராட்டியதாக அவர் சொன்னார்.


திரு. ராதா கிருஷ்ணன், 33

எப்படியும் வாழ்வில் முன்னேறி விடுவேன். எனக்கு உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

என நம்பிக்கையுடன் கூறும் திரு. ராதா கிருஷ்ணனுக்கு இன்னோர் ஆசையும் உண்டு. செயற்கை கை பொருத்தவேண்டும் என்பதுதான் அது.


உடலில் குறையிருந்தாலும் நாணயமாக உழைத்து வாழவேண்டும் எனத் துணிந்து போராடுவோரைச் சமுதாயம் நிச்சயம் கைவிடாது என்பதற்கு இவரின் கதை ஓர் எடுத்துக்காட்டு.  

Top