Images
  • GOBINTH
    (படம்: Bernama)

இணைய அச்சுறுத்தல்களைக் கையாள சட்டத்தை மாற்ற ஆலோசிக்கும் மலேசியா

மலேசியாவில் இணைய அச்சுறுத்தல் சம்பவங்களைக் கையாளும் வகையில், சட்டத்தில் மாற்றம் செய்யப்படக்கூடும் என்று அந்நாட்டுத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ (Gobind Singh Deo) தெரிவித்துள்ளளார்.

சரவாக்கில் 16 வயதுப் பெண் ஒருவர், Instagram செயலியில் ஒரு தகவலைப் பதிவு செய்துவிட்டு கட்டடத்தின் கூரையிலிருந்து குதித்தார்.

வாழ்வதா / சாவதா இரண்டில் ஒன்றைத் தெரிவுசெய்யத் தமக்கு உதவுமாறு அந்தப் பெண் தமது Instagram பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய பக்கத்தைப் பின்தொடர்வோரில் 69 விழுக்காட்டினர் மரணத்தைத் தெரிவுசெய்யச் சொல்லி வாக்களித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வழக்கின் உண்மை நிலையை அறிந்துகொள்ளும் பொருட்டு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணைக்குழுவைக் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுமாறு தாம் கேட்டுக்கொண்டதாகத் திரு. கோபிந்த் சிங் கூறினார்.

தற்கொலை பற்றிச் சமூக வலைத் தளங்களில் பகிரப்படும் தகவல்கள் குறித்துக் கவனமாக நடந்துகொள்ளுமாறு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்தகைய பதிவுகள் குறித்துக் காவல்துறைக்கும், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு அந்தக் குழு கேட்டுக்கொண்டது. 

Top