Images
  • Malaysia Singapore ministers (1)
    (படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூர் மலேசிய அமைச்சர்கள் மற்ற இருதரப்பு விவகாரங்கள் குறித்து சந்தித்துப் பேசுவர்: மலேசிய வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையில் நடைபெறவிருந்த 14ஆவது 'இஸ்கந்தர் மலேசியா கூட்டு அமைச்சர்நிலைக் குழுக்களின் சந்திப்பு' ஒத்திவைக்கப்பட்டாலும், மற்ற இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுநடத்த இருநாட்டு அமைச்சர்களும் சந்திப்பர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

மலேசியப் பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலி, சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்திப்பார்.

மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று அதனைத் தெரிவித்தது.

அமைச்சர்களின் சந்திப்பு இருநாட்டு உறவுகள் வலுவானவை என்பதைக் காட்டுவதாக அது குறிப்பிட்டது.

கூட்டு அமைச்சர்நிலைக் குழுக்களின் சந்திப்பு நாளை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ஜொகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சப்யான் (Osman Sapian) சென்ற புதன் கிழமையன்று சிங்கப்பூரின் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததைச் சுட்டிய சிங்கப்பூர் அந்தச் சந்திப்பைத் தள்ளிவைத்தது.

சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

இருப்பினும், மலேசிய அமைச்சர் அஸ்மின் அலி, சிங்கப்பூர் அமைச்சர்கள் லாரன்ஸ் வோங், விவியன் பாலகிருஷ்ணன் மூவரும் மற்ற விவகாரங்கள் குறித்துக் கலந்துபேசுவர் என்று மலேசியா தெரிவித்தது.

இம்மாதம் 8ஆம் தேதி இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்தனர். அந்தச் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, ஆக்ககரமான அடுத்த படியாக, 3 அமைச்சர்களின் சந்திப்பு இடம்பெறும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

சமத்துவம், இருதரப்பு மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் அது கடப்பாடு தெரிவித்தது.


 

Top