Images
  • icerd

மலேசியாவில் பேரணிகள் - சில முக்கியத் தகவல்கள்

கோலாலம்பூர்: மெர்டேக்கா சதுக்கத்தில் இன்று ( டிசம்பர் 8 ) நடைபெறவுள்ள பேரணியின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசியக் காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.

மலேசியாவில் அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை அனுசரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு பேரணி பாதுகாப்பு எச்சரிக்கைகளை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பேரணிகளை முன்னிட்டு சிங்கப்பூரர்கள் கோலாலம்பூர் செல்வதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஆலோசனை கூறியிருந்தது.

மலேசிய எதிர்க்கட்சிகளான அம்னோ, பாஸ் போன்றவை பேரணியில் கலந்துகொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணி பற்றிய சில முக்கியத் தகவல்கள்:

1) சுமார் 50,000 பேர் பங்கேற்கக்கூடும்

மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் உடன்படிக்கையில் மலேசியா கையெழுத்திடாததற்கு பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேரணிக்கு ஏற்பாடுசெய்யப்படுகிறது.

கிளந்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை நாள். ஆனால் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முடிவை கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார்.

2) ஆறு சாலைகள் மூடப்பட்டுள்ளன

இன்று நடைபெறவிருக்கும் பேரணிக்கு கோலாலம்பூரின் 6 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பேரணியில் கலந்துகொள்வோர் மாலை 6 மணிக்குள் சாலைகளிலிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்று மலேசிய காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

3) விழிப்புநிலையில் காவல்துறையின் கலகத் தடுப்புப் பிரிவு

பேரணி அமைதியாக நடைபெறப் போதுமான காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

பேரணியில் வன்முறை மூண்டால் அதைக் கையாளக் கலகத் தடுப்புப் பிரிவினர் விழிப்பு நிலையில் உள்ளனர். பேரணியில் கலந்துகொள்வோர் ஆயுதங்களைக் கொண்டு வரக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

4) 'சேதம் விளைவிக்கக்கூடாது': மகாதீர் எச்கரிக்கை

ICERD உடன்படிக்கையில் கையெழுத்திடாததற்கு மக்கள் நன்றி தெரிவிப்பதைச் சுட்டிய மலேசிய பிரதமர் மகாதீர், என்றாலும் பேரணி நடத்துவதற்கான தேவை ஏதும் இல்லை என்றார்.

பேரணியில் கலந்துகொள்வோர் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
 

Top