Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: தவறாகக் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட ஆடவர் 27 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

சீனாவின் ஜியாங்ஸி மாநிலத்தில், சிறுவர்கள் இருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஆடவர்,

வாசிப்புநேரம் -
சீனா: தவறாகக் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட ஆடவர் 27 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

கோப்புப்படம்: REUTERS/ AFP

சீனாவின் ஜியாங்ஸி மாநிலத்தில், சிறுவர்கள் இருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஆடவர்,
27 ஆண்டுச் சிறைவாசத்துக்குப் பின் அந்தக் குற்றத்தைப் புரியவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜாங் யூஹுவான் எனப்படும் அந்த 53 வயது ஆடவர், கொலை செய்ததை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உச்ச மக்கள் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) தீர்ப்பு அளித்ததாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

1993ஆம் ஆண்டில், ஜியாங்ஸி மாநிலத்தின் நன்சாங் நகரில் இரு சிறுவர்கள் மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அந்தச் சிறுவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான ஜாங், அந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டதாக CNN கூறியது.

நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில், நிபந்தனையோடு கூடிய மரண தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு, அவர் எந்தக் குற்றமும் புரியவில்லை என்பதால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஆனால், தாம் கொலை செய்யவில்லை என்று கூறி, ஜாங் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேலும், விசாரணையின்போது காவல்துறையால் தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் மறுவிசாரணைக்கு வந்த அந்த வழக்கில், ஜாங் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தமது வாழ்க்கையின் பொன்னான 27 ஆண்டுகளைச் சிறையில் இழந்ததற்காக, ஜாங் மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.

அரசாங்க இழப்பீட்டுக்காக அவர் விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும், தாம் இழந்த வாழ்க்கைத் தருணங்களை அது ஈடுகட்டாது என்றார் ஜாங்.

அவருடைய இரு மகன்களுக்கும் திருமணமாகி, பிள்ளைகள் உள்ளன.

சீனாவில் நீதிமன்றக் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் 99 விழுக்காட்டுச் சந்தேக நபர்கள் குற்றவாளிகள் என்றே தீர்ப்பளிக்கப்படுவதாக, மனித உரிமை ஆர்வலர்கள் குறைகூறி வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்