Images
  • Manila Water
    (படம்: Darren Langit/Rappler)

மணிலாவின் சில பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை


பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் சில பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.

குறைந்து வரும் மழை, அதிகரித்து வரும் தண்ணீர்த் தேவை ஆகியவற்றின் காரணமாக, லே மெஸ்சா (Le Mesa )அணையில் தண்ணீரின் அளவு ஆபத்தான அளவுக்குக் குறைந்தது.

அதனை அடுத்து, தண்ணீர்ச் சேவை வழங்கும் Manila Water நிறுவனம், பல பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியது.

அதன் காரணமாக, சுமார் 52 ஆயிரம் வீடுகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்று Manila Water நிறுவனம் கூறியது.

சீனாவிடமிருந்து பெற்ற நிதியுதவியில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள புதிய அணை, அத்தகைய தண்ணீர்ப் பிரச்சனையைத் தணிக்க உதவும் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் கூறியது.

ஆனால், அந்த அணையின் கட்டுமானப் பணிகளுக்கு இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களும் பொதுமக்களும் பெருமளவில் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

அந்த அணை, பிலிப்பீன்ஸின் ஆகப் பெரிய மலைத்தொடரான செய்ரா மாட்ரே (Sierra Madre )அமைந்துள்ள பகுதியில் கட்டப்படும் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்தது.

அங்குதான், பிலிப்பீன்ஸின் ஆகப் பெரிய பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பூங்காவும் அமைந்துள்ளது. புதிய அணையால், அங்குள்ள பல்லுயிரினங்களுக்கு மேலும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

Top