Images
  • melaka 1

மலாக்கா தேர்தல் முடிவு: மலேசியர்கள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் திரும்பிவிட்டார்களா?

மலாக்கா மாநிலத் தேர்தலில் நடப்பு அரசாங்கத்தின் தலைமையிலான தேசிய முன்னணி (Barisan Nasional) கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

மொத்தம்: 28 தொகுதிகள்

முடிவுகள்

தேசிய முன்னணி (Barisan Nasional) கூட்டணி: 21 தொகுதிகள்

  • அம்னோ: 18
  • மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா): 1
  • மலேசிய சீன சங்கம் (சசீச): 2

பக்கட்டான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணி: 5 தொகுதிகள்

  • கெஅடிலான் (Parti Keadilan Rakyat): 0
  • ஜனநாயகச் செயல் கட்சி (DAP): 4
  • அமானா (Amanah): 1

2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலாக்கா மாநிலத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி (Pakatan Harapan) 15 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது.

முன்னாள் பிரதமர் முஹிதீன் யாசினின் (Muhyiddin Yassin) பெரிக்கட்டான் நேசியோனல் (Perikatan Nasional) கூட்டணி: 2 தொகுதிகள்

  • பெர்சாத்து (Parti Pribumi Bersatu Malaysia): 2
  • பாஸ் (Parti Islam SeMalaysia): 0
  • கெராக்கன் (Parti Gerakan):0

இந்நிலையில், மலாக்கா தேர்தல் முடிவை தேசிய முன்னணியின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கமுடியாது என்கிறார் அரசியல் கவனிப்பாளரும் வழக்கறிஞருமான முருகேசன்.


நடப்பு அரசாங்கம் செயல்பாட்டில் இருக்கும்போது இதுபோன்ற மாநிலத் தேர்தல், இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது இயல்புதான். குறிப்பாக 65.85 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துள்ளார். 35 விழுக்காடினர் வாக்களிக்க வரவில்லை. அந்த அடிப்படையில் இதனை முழுமையான வெற்றியாகப் பார்க்கமுடியாது,

என்று அவர் கூறினார்.

(படம்: Facebook/Sulaiman Md Ali)


2018ஆம் ஆண்டிற்கு முன்னதாக நடந்த இடைத் தேர்தல்களிலும் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 14ஆவது தேசிய பொதுத் தேர்தலில் அவர்கள் தோல்வி கண்டார்கள். இந்த முடிவை அடிப்படையாகக் கொண்டு அடுத்த பொதுத் தேர்தலை முடிவுசெய்ய முடியாது,

என்று திரு. முருகேசன் சொன்னார்.

ஆனால் திரு. அன்வாரின் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி (Pakatan Harapan) மலாக்கா மாநிலத்தில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் அதனைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் உடனடியாகக் களமிறங்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது எனவும் திரு. முருகேசன் கூறினார்.

மக்கள் தேசிய முன்னணி பக்கம் திரும்பிவிட்டார்கள்; அது அடுத்த பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்கிறார் அரசியல் கவனிப்பாளர் பெரி முத்தன்.


மலாக்கா தேசிய முன்னணியின் கோட்டை என்பது மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலாக்கா மக்கள் தற்காலச் சூழ்நிலைக்காக இந்த முடிவை எடுத்தார்களா? அல்லது கடந்த அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இழந்து விட்டார்களா என்பதைப் பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"மலாக்கா மாநிலத் தேர்தல் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியாகத் தொடருமா? அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நடக்கும்போது மாநில ஆட்சி கலைக்கப்படுமா? என்ற கேள்விக்குக்கூட இப்போது பதில் இல்லை. மலாக்கா மாநிலத்தைப் பொறுத்தவரையில் தற்காலிகச் சிக்கல் தீர்ந்துள்ளது." என்று அவர் கூறினார்.

65 விழுக்காடினர் மட்டுமே வாக்களித்திருந்தாலும் வெற்றி வெற்றிதான்.... ஆட்சியை இழந்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தேசிய முன்னணிக்கு அது மகத்தான வெற்றிதான் என்கிறார் பெரி முத்தன்.

இந்நிலையில், மலாக்கா மாநிலத் தேர்தலில் முன்னாள் பிரதமர் முஹிதீன் யாசினின் (Muhyiddin Yassin) கட்சி, சில முதன்மைத் தொகுதிகளுக்குக் கிடைத்த வாக்குகளில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அது நடப்பு அரசாங்கத்திற்கு அடுத்த பொதுத் தேர்தலில் நெருக்குதலை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. 

Top