Images
  • mrs srilanka
    (படம்: AFP)

தலையிலிருந்து மகுடம் பிடுங்கப்பட்ட 'Mrs Sri Lanka' அழகுராணிப் போட்டியின் வெற்றியாளருக்கு மீண்டும் பட்டம்

தலையிலிருந்து மகுடம் பிடுங்கப்பட்ட 'Mrs Sri Lanka' அழகுராணிப் போட்டியின் வெற்றியாளருக்கு, மீண்டும் பட்டம் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறுக்கிழமை (ஏப்ரல் 4) அன்று நடைபெற்ற போட்டியில், புஷ்பிக்கா டி சில்வா (Pushpika de Silva) என்ற பெண் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு வெற்றியாளர் மகுடமும் சூடப்பட்டது.

இருப்பினும், போட்டியின் முன்னாள் வெற்றியாளரான கேரலைன் ஜூரி (Caroline Jurie), அவரது தலையிலிருந்து மகுடத்தைப் பிடுங்கினார்.

டி சில்வா, மணவிலக்குப் பெற்றவர் என்பதால், அவருக்குப் பட்டம் பெறத் தகுதியில்லை என்றும் அவர் கூறினார்.

'Mrs Sri Lanka' போட்டியில் கலந்துகொள்வதற்கு, அனைவரும் திருமணம் செய்துகொண்டவர்களாக இருக்கவேண்டும்.

டி சில்வா, தம்முடைய கணவரைப் பிரிந்து வாழ்ந்தாலும் இன்னமும் சட்டப்படி அவர்கள் கணவன், மனைவியாகவே உள்ளனர்.

ஜூரி, தலையிலிருந்து மகுடத்தைப் பிடுங்கியதால் காயமடைந்த டி சில்வா, மருத்துவமனையில் சிகிச்சை பெறநேரிட்டது.

மேடையில் தாம் நடத்தப்பட்ட விதத்துக்காக அவர் ஜூரி, மீது வழக்குத் தொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜூரி, நிகழ்ச்சி நடந்த மேடைக்கும், முக ஒப்பனை அறைகளுக்கும் சேதம் விளைவித்ததாகப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

அவர் அறைகளின் சில கண்ணாடிகளை உடைத்ததாக நம்பப்படுகிறது.

அதற்கு ஜூரியிடம் இழப்பீடு கோரிவருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-AFP
 

Top