Images
  • msia covid (2)
    AFP

'மெத்தனமாக இருந்துவிடவேண்டாம்!' - மலேசியாவில் நோய்த்தொற்றுக்கு ஆளான சிலரின் அனுபவங்கள்

மலேசியாவில் தினந்தோறும் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு வரும் COVID-19 நோய்த் தொற்று, மக்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நோய்த்தொற்றுக்கு ஆளான சிலர், தங்களது அனுபவங்களை 'செய்தி' -உடன் பகிர்ந்துகொண்டனர்....

"மீண்டு வருவார் என நினைத்தோம். மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டார்!"

சிலாங்கூரின் கோல லங்காட் (Kuala Langat) மாவட்டத்தில் வசிக்கும் திரு. M. நவரத்தினத்தின் குடும்பம், நோய்த் தொற்றுக்கு ஆளாகி, பெரும் இன்னலை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், தாங்கள் உயிருக்குயிராய் நேசித்த ஒருவரையும் பறி கொடுத்தது.


திரு.நவரத்தினம், அவரது மனைவி, பிள்ளைகள் இருவர், தந்தை, தாயார் என குடும்பத்தில் இருந்த ஆறு பேரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

COVID-19 பற்றி செய்திகளில் கேட்கும்போது 'எங்கோ இருக்கும் நோய்க்கிருமிதானே, யாருக்கோ பரவும் தொற்றுதானே' என அலட்சியமாக இருந்துவிட்டோம். எங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

என்கிறார் திரு. நவரத்தினம்.

இவரது 10 வயது மகனுக்கு முதலில் தொற்றிய நோய், பிறகு ஒருவர் பின் ஒருவராகப் பரவியது.

நோய்த்தொற்றுக்கு ஆளான இவரது தந்தை திரு.மரியசூசை, மே 15ஆம் தேதி உயிரிழந்தார்.

ஐந்து பிள்ளைகள் இருந்தும் தந்தைக்குச் செய்யவேண்டிய ஈமச் சடங்குகளைக் கூடச் செய்ய முடியவில்லை என்று வருந்தினார் அவர். தமது தாய்-தந்தை இருவரும், கடைசி நாள்களில் ஒருவர் முகத்தை ஒருவர் நேரில் காண முடியாமலேயே பிரிந்தனர் எனக் கூறிக் கண் கலங்கினார் திரு.நவரத்தினம்.

வெளியில் செல்வதை, முடிந்த வரை தவிர்த்துவிடுங்கள். வெளியில் செல்வதாக இருந்தால், தயவுசெய்து விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். அலட்சியத்தால் நாங்கள் அனுபவித்த வேதனை வேறு யாருக்கும் வரக்கூடாது

என அவர் சொன்னார்.

பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் வந்த வினை!(ராஜேந்திரன் சுப்பையா, 60)

அண்டைவீட்டுக்காரர் தமது தோளில் கை போட்டுப் பேசும்போது அதனைத் தடுக்காததால் தாமும் நோய் பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்திருப்பதாகக் கூறுகிறார், 60 வயது திரு.ராஜேந்திரன் சுப்பையா.

“நன்கு பேசிப் பழக்கப்பட்ட ஒருவரிடம் எவ்வாறு என்னைத் தொடாதே எனக் கூறுவது என்று தயங்கியதால் வந்த வினை. அதனால், எனது அண்டை வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்று, எனக்குப் பரவி, என் மனைவியையும் பாதித்தது.

சில தினங்களுக்கு முன்புதான் வீடு திரும்பினோம். இப்போது யாரும் எங்களை நெருங்கி விடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே இருக்கின்றோம்.” என்றார் திரு. ராஜேந்திரன்.

கவனமாகத்தான் இருந்தோம், எப்படியோ கிருமி தொற்றிவிட்டது


(ராதிகா முத்தாலு & சுரேஸ் சுப்ரமணியம்)

நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து எல்லா விதத்திலும் கவனமாக இருந்தும், நோய் தொற்றியது என வருந்துகிறார் 38 வயது திருமதி ராதிகா முத்தாலு.

வெளியில்தான் செல்வதில்லையே, எங்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், என் கணவர் மூலமாக எனக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு விட்டது.

உணவகங்களுக்குக் காய்கறிகளை விநியோகிக்கும் வேலையைச் செய்து வரும் என் கணவர், செலாயாங் (Selayang) மொத்தச் சந்தையில் காய்கறிகளை வாங்கி வரும் சமயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டது.

நோயிலிருந்து தாமும் கணவரும் மீண்டு விட்டாலும், அதன் தாக்கம் இன்னும் இருப்பதாகச் சொன்னார் அவர். உணவின் ருசி தெரியவில்லை. நுகரும் சக்தியும் போய்விட்டது. எந்த வாசனையும் தெரிவதில்லை. உடல் சோர்வும், இன்னும் நீங்கவில்லை என்றார் திருமதி ராதிகா.

நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கின்றோம், நமக்கு எதுவும் வராது என்று யாரும் மெத்தனமாக இருந்து விடவேண்டாம். நடப்புச் சூழ்நிலையில், நோய்ப் பரவல் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக அதிகம்.

என்றார் திருமதி ராதிகா.

நோயால் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டு வந்தவர்களும், முடிந்தவரை தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட விரும்புவதாகக் கூறினர்.  

Top