Images
  • malaysia school
    REUTERS

'தேர்வு இல்லாவிட்டாலும், மதிப்பீட்டு முறை அவசியம்'-மலேசியாவில் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு அகற்றப்பட்டது குறித்துப் பெற்றோர்

மலேசியாவில் இவ்வாண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான UPSR எனப்படும் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு நிரந்தரமாக அகற்றப்படுவதாக மலேசிய கல்வியமைச்சர் டாக்டர் முகமட் ரட்சி ஜிடின் (Dr Mohd Radzi Jidin) அறிவித்திருப்பது, சிலருக்கு ஆறுதலாகவும் இன்னும் சிலருக்கு அதிருப்தியாகவும் அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் இம்முடிவு பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை ‘செய்தி’ நிருபர் தனலெட்சுமி புவனேந்திரன் கேட்டறிந்தார்.


தேர்வு அகற்றப்பட்டதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாணவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் பரிசோதிக்க, தேர்வுகள் மிக அவசியம். 


எல்லா காலக்கட்டத்திலும், எல்லா வயதிலும் மன அழுத்தம் இருக்கத் தான் செய்யும். அதைச் சமாளிக்கக் கற்றுத் தர வேண்டுமே தவிர, அதில் இருந்து விலகி ஓட கற்றுக் கொடுக்கக் கூடாது. 

-காளியண்ணன் பொன்னன், 79
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், சிலாங்கூர்


என் மகள் ஆறாம் வகுப்பு பயில்கிறார். நல்ல தேர்ச்சியைப் பெற, தன்னை ஆரம்பம் முதற்கொண்டே தயார்படுத்தி வந்துள்ளார். அப்படியிருக்க UPSR தேர்வு இனி இல்லை என்ற செய்தி எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிள்ளைகளின் கல்வித் தரம், தொடக்கப் பள்ளியில் அவர்களின் ஆளுமைத் திறன், பாடங்களில் அவர்களுக்கு இருக்கும் புரிதல்-கருத்துணர்தல் போன்றவற்றை மதிப்பீடு செய்ய, UPSR தேர்வு முக்கிய பங்கு வகித்து வந்தது.

-ஜெயகாந்த் நாகலிங்கம், 44
கோலாலம்பூர்

தேர்வை நிரந்தரமாக அகற்றியிருக்கும் அமைச்சு, மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் மாற்று வழியைக் கண்டறிய வேண்டும் என்றார் அவர்.

இல்லையென்றால் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எந்த இலக்கும் இல்லாமல் ஆகி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


UPSR தேர்வு அகற்றப்பட்டதில் எனக்குப் பாதி மகிழ்ச்சி, பாதி கவலை. நாம் நீண்ட காலமாகவே தேர்வுகள், மதிப்பெண்கள் சார்ந்த ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறோம்.

ஒரு மாணவரின் புத்திசாலித்தனத்தை, தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பீடு செய்வது என்னைப் பொருத்தவரை நியாமற்றது.

அதே சமயம், பிள்ளைகளுக்கு அவ்வப்போது சில மதிப்பீடுகளும் தேவைப்படுகிறது என்ற உண்மையையும் என்னால் மறுக்க முடியாது. 

-தேஷா ஐசுரா சுல்கெஃப்லி (Tesya Aizura Zulkeffly), 39
கோலாலம்பூர்


தேர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை, அதுவும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட மாணவர்களிடம் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

அழுத்தம் குறைவான ஒரு சூழலில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும். அவர்களது குழந்தைப் பருவத்தை அனுபவிக்க நாம் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதை விடுத்து மதிப்பெண்களுக்குப் பின்னால் நாமும் ஓடுகிறோம், பிள்ளைகளையும் ஓட வைக்கிறோம்.

எனவே UPSR தேர்வு அகற்றப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி தான். அடுத்து மாணவர்களின் தேர்ச்சி நிலையைத் தொடர்ந்து உறுதிச் செய்ய, கல்வியமைச்சு, ஆசிரியர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கிறேன்.

-சார்லின் சியா (Charlene Cheah), 38
சிலாங்கூர்எனக்கு மகிழ்ச்சி தான்.

நன்றாகப் படிக்கும் பிள்ளைகளை எப்படியாவது தேர்வில் அனைத்து பாடங்களிலும் A நிலையைப் பெற வைக்க, ஆசிரியர்களும் நெருக்குவதுண்டு.

இதனால் மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோராகிய நாங்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறோம். தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுப்பதற்காக மாணவர்களை இறுக்கிப் பிடித்து, நெருக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

-மோகனா துரைராஜ், 41
சிலாங்கூர்

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டாலும், மாணவர்கள் மதிப்பிடப்படுவதை அது பாதிக்காது, அவர்கள் மற்ற முறைகளில் மதிப்பிடப்படுவர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

Top