Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒரு பக்கம் ஆறுதல்; மறு பக்கம் அச்சம் - தளர்வுகளுக்கு இடையே கவனமாய் அடியெடுத்துவைக்கும் மலேசிய வர்த்தகர்கள்

மலேசியாவில் பெரும்பாலான மாநிலங்களின் வட்டார எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதை மக்களைப் போலவே வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் பெரும்பாலான மாநிலங்களின் வட்டார எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதை மக்களைப் போலவே வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

இருப்பினும் COVID-19 நோய்ப்பரவல் குறையாத சூழ்நிலையில் தளர்வு வழங்கப்பட்டிருப்பது அவர்களுக்கு ஒரு பக்கம் அச்சமாக உள்ளது.

இருந்தாலும், எல்லைகளைத் தொடர்ந்து மூடி வைத்தால் வர்த்தகர்களுக்கு நட்டம் இன்னும் அதிகமாகும் என்கிறார் மலேசிய இந்திய ஜவுளிக்கடை உரிமையாளர் சங்கச் செயலாளரும், தெங்கு கிளானா (Tengku Kelana) கெளரி பட்டுமாளிகை ஜவுளிக்கடை உரிமையாளருமான திருமதி. மகேஷ்வரி ராமசாமி.

தடுப்பூசி போடும் நடவடிக்கையை அரசாங்கம் இன்னும் துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் வியாபாரிகளும் தைரியமாக வர்த்தகத்தை நடத்தமுடியும் எனத் திருமதி. மகேஷ்வரி கூறினார்.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில், வியாபாரிகள் மட்டுமல்ல, பொது மக்களும் அதிகப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றார் அவர்.

நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக எல்லைகளைத் தொடர்ந்து மூடி வைத்திருப்பது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது என்றார், Grab கார் ஓட்டுனரான 44 வயது திரு. ரோய் ஸ்டீவன்.

இதுநாள் வரை வருமானம் மிகக் குறைவாகவே இருந்தது. நாள் முழுக்க ஓடினாலும் நாளொன்றுக்கு 100 ரிங்கிட்டைப் (சுமார் 32 வெள்ளி) பார்ப்பது கூட மிக அரிது. எனது வீட்டு வாடகை, வீட்டுச் செலவு, காருக்கான தவணைக் கட்டணம் அனைத்தையும் கவனித்தாக வேண்டும்.

இனி, வருமானம் கொஞ்சம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுண்டு. அதேசமயம், பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளை மட்டுமே காரில் ஏற்ற முடிவெடுத்துள்ளேன்” என்கிறார் திரு.ரோய்.

உணவு விநியோக (Catering) வியாபாரம் செய்து வரும் திருமதி நிர்மலா, வட்டார எல்லைகள் திறக்கப்பட்டதில் தமக்கு மகிழ்ச்சியும் உண்டு; பயமும் உண்டு என்கிறார்.

“முன்னர், என் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்தேன். பள்ளிகள் மூடப்பட்ட பின்னர் வருமானம் ஈட்ட உணவு விநியோக வியாபாரம் செய்யத் தொடங்கினேன். ஆனால் எல்லைகள் யாவும் மூடப்பட்டிருந்ததால் வியாபாரத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியவில்லை.

இப்போது உணவு விநியோகத்துக்கான முன்பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருவது ஆறுதலாக இருப்பதாய்ச் சொன்னார் அவர்.

பயம் என்னவென்றால், நாட்டில் கிருமிப்பரவல் இன்னும் குறையவே இல்லை. அதற்குள் வட்டார எல்லைகள் திறக்கப்பட்டு விட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி விடுமோ என்ற அச்சம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விடுமோ என்ற பயமும் உள்ளது”

என்கிறார் திருமதி நிர்மலா.

தளர்வுகள் வர்த்தகத்திற்குப் பலனளிக்கும் என்றாலும், பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவது முக்கியம் என்கின்றனர் வர்த்தகர்கள். வியாபாரத்தைத் தொடர்ந்தாலும் கவனமாக அடியெடுத்து வைப்பதாய் அவர்கள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்