Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் உருமாற்றம் கண்ட புதிய வகைக் கொரோனா கிருமி எவ்வளவு ஆபத்தானது?

இந்தியாவில் உருமாற்றம் கண்ட புதிய வகைக் கொரோனா கிருமி சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்டது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் உருமாற்றம் கண்ட புதிய வகைக் கொரோனா கிருமி எவ்வளவு ஆபத்தானது?

(படம்: AFP)

இந்தியாவில் உருமாற்றம் கண்ட புதிய வகைக் கொரோனா கிருமி சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்டது.

அது, கிருமிப்பரவல் கட்டுக்கடங்காமல் போவதற்குக் காரணமாய் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு வெவ்வேறு கொரோனா கிருமிகள் கூட்டாகச் சேர்ந்து, புதிய கிருமியாக உருவெடுத்துள்ளன.

அதனால், சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் சிலவகைப் பயணிகளுக்குத் தடை விதிக்கத் தொடங்கியுள்ளன.

கூட்டாகச் சேர்ந்துள்ள புதிய கிருமி, எளிதாகத் தொற்றக்கூடியது என்றும் அது தடுப்பு மருந்தின் செயல்திறனைக் குறைக்கக் கூடியது என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

புதிய கிருமிபற்றி மருத்துவ நிபுணர்களிடம் "TODAY" மேல் விவரங்கள் கேட்டது.

புதுவகைக் கொரோனா கிருமி எப்படி உருவானது?

B1617 என்று அழைக்கப்படும் அந்த கொரோனா கிருமி, கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாகக் கிருமிகள் உருமாற்றம் பெறுவது, சாதாரணமானதுதான். ஆனால், சிலவகை உருமாற்றம் அதிக ஆபத்தானது.

B1617 கிருமிவகை, மற்ற உருமாற்றங்களில் இருந்து சற்றே வேறுபட்டது.

கிருமியின் வெளிப்புறத்தில் கொடுக்குபோல் காணப்படும் புரத நீட்சியில் (spike protein), உருமாற்றமடைந்த இரண்டுவகையான கிருமிகள் அடையாளம் காணப்படுவது இதுவே முதன்முறை.

உருமாற்றம் பெற்ற கிருமிகளின் பெயர்கள்
E484Q, மற்றும் L452R

- துணைப் பேராசிரியர் சு லி யாங் (சா ஸ்வீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளி )

புதிய கிருமியின் ஆபத்து எப்படி இருக்கும் ?

புதிய கிருமியின் தொற்றும்தன்மையும் அது மரணத்தை ஏற்படுத்தும் சாத்தியமும் அதிகமா என்பது குறித்து ஆய்வாளர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

L452R கொரோனா கிருமி 20 விழுக்காடு வேகமாகப் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை, 50 விழுக்காட்டுக்குமேல் குறைக்கக்கூடியது.

அதனால், இப்போது போடப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளின் செயல்திறனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அது விளங்கக்கூடும்

இருப்பினும், தடுப்பு மருந்து, நோயால் ஏற்படும் கடுமையான உடல்நல பாதிப்புகளைக் குறைக்க உதவும்.

டாக்டர் பெஞ்சமின் பின்ஸ்கி (Benjamin Pinsky) , அமெரிக்க தலைமை ஆய்வாளர்.

எப்படி இவ்வளவு வேகமாகப் புதிய கிருமி பரவியது :

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக நோய்ப்பரவல் அதிகமானதற்குக் காரணம், அங்கு நோய்த்தொற்றைத் தவிர்க்கும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததுதான்.

கும்பமேளா, மாநிலத் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பெரிய அளவிலான கூட்டங்கள் நடைபெற அனுமதித்தது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாதது-முதலியவை முக்கியக் காரணங்கள்.

இதனால், இரண்டு மூன்று கிருமிகள் ஒன்றாக இணைந்து கூட்டாக உருமாறும் சூழல் எளிதாக உருவானது.

உலக நாடுகள் நடவடிக்கை:

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு, நியூஸிலந்து முற்றாகத் தடை விதித்துள்ளது.

சிங்கப்பூரும், நீண்டகால அனுமதியில் உள்ளோருக்கும் இடைவழிப் பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங் ஆகியவையும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

புதிய கிருமிபற்றிப் போதிய தகவல் இல்லாததாலும், இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவிவரும் நோய்ப்பரவல் காரணமாகவும் உலக நாடுகள் இத்தகைய பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக நிபுணர்கள் கூறினர்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர், குறிப்பிட்ட இடத்தில் 21 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டாலும் அவர்களிடம் அதிகமான மருத்துவச் சோதனைகள் செய்ய வேண்டும்; அதனால் சமூக அளவில் புதிய கிருமிப் பரவல் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கமுடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்