Images
  • najib 1MDB (1)
    (படம்: Reuters/Edgar Su/Files)

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து 972 மில்லியன் டாலர் பெற்றவர்களிடம் காவல்துறை விசாரணை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடப்பட்ட 972 மில்லியன் டாலரிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்ற 50 தனிநபர்களை அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது.

அந்தப் பணம் 1MDB சர்ச்சைக்குத் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

மொத்தத்தில் 4.5 பில்லியன் டாலரை அந்த நிதியின் உயர் அதிகாரிகளும் அவர்களின் உதவியாளர்களும் கையாடியதாக அமெரிக்க நிதித்துறை கூறியுள்ளது.

சிங்கப்பூர், சுவிட்சர்லந்து, அமெரிக்கா உள்ளிட்ட குறைந்தது 6 நாடுகளில் 1MDB சர்ச்சை குறித்த விசாரணை இடம்பெறுகிறது.

திரு. நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து நிதி பெற்றவர்களை மலேசியக் காவல்துறை விசாரிப்பதாக துணைத் தலைமைக் காவல்துறை அதிகாரி நூர் ரஷீட் இப்ராஹிம் கூறினார்.

அவர்களின் வாக்குமூலத்தைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

2015இல் தொடங்கிய 1MDB சர்ச்சையில், இதுவரை சுமார் 132 பண மோசடிப் பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றைக் குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.




 

Top