Images
  • everest (1)
    AFP/Jewel SAMAD

அதிகரிக்கும் நோய்ப்பரவலுக்கு இடையே இமய மலைக்குப் பயணிகளை அனுமதிக்கும் நேப்பாளம்

அதிகரிக்கும் நோய்ப்பரவலுக்கு இடையே இமய மலைக்குப் பயணிகளை அனுமதிக்கவுள்ளது நேப்பாளம். சுற்றுப்பயணத் துறையை நம்பியுள்ள பொருளியலுக்கு மெருகூட்ட அந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

உலகின் ஆக உயரமான 14 சிகரங்களில் 8, நேப்பாளத்தில் அமைந்துள்ளன. மார்ச் மாதத்தில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அங்கு சுற்றுப்பயணங்கள் தடைசெய்யப்பட்டன.

30 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நேப்பாளத்தில் சுமார் 20,000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

இலையுதிர்க் காலத்திற்கான மலையேறும் உரிமங்கள் கொடுக்கப்படும் என்றது பயணத்துறை. ஆயினும் அரசாங்கம் விதித்துள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பயணிகள் பின்பற்றவேண்டும் என்று அது வலியுறுத்தியது.

ஏப்ரல், மே மாதங்களில் மலையேறும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதால் நேப்பாளம் பல மில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க நேரிட்டது; சுமார் 200,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

மலையேறுவது அனுமதிக்கப்பட்டாலும், அடுத்த மாத நடுப்பகுதி வரை நேப்பாளத்தில் பயணக் கட்டுபாடுகள் தொடரும்.

நேற்று (ஜூலை 30) அங்கு ஹோட்டல்கள், உணவகங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.



Top