Images
  • noodle

மாணவர்களுக்கு முறையான ஊட்டச்சத்துமிக்க உணவு அளிக்கத் தவறிய சீனப் பள்ளி மீது விசாரணை

சீனாவில், மாணவர்களுக்கு முறையான ஊட்டச்சத்துமிக்க உணவை அளிக்கத் தவறிய தொடக்கப்பள்ளியில் அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

ஷாங்ஷுயிலுள்ள (Shangshui) டாசௌ (Dacao) தொடக்கப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் படிக்கின்றனர்.

அவர்களில் ஒருவரது தந்தை தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிய வேலை அரைக் கிண்ணம் நூடல்ஸ் (noodles) மட்டுமே அளிக்கப்படுவதைக் கண்டுபிடித்தார்.

ஒப்புநோக்க, பள்ளி மதிய வேளை உணவுப் பட்டியலின்படி மாணவர்களுக்கு அன்றாடம் 60கிராம் கோழி, குறைந்தது மூன்று வகைக் காய்கறிகள், சோறு ஆகியவை கொடுக்கப்படவேண்டும்.

ஆனால் வெறும் அரைக் கிண்ணம் நூடல்ஸ் மட்டுமே மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவதை அந்தத் தந்தை எடுத்த 2 நிமிடக் காணொளி காட்டுகிறது.

அது பெற்றோருக்குச் சினமூட்டியது.

இது குறித்து நகரக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 13) பள்ளி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தொடக்கப்பள்ளியின் மேற்பார்வையோடு சம்பந்தப்பட்ட மேலும் சில அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களின் மதிய உணவில், சத்துள்ள உணவுப் பொருட்களைச் சேர்க்கும் திட்டம், 2011இல் தொடங்கப்பட்டது.

அரசாங்க நிதியாதரவுடன் வசதி குறைந்த 700 மாவட்டங்களில், தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும் சேர்ந்த சுமார் 33 மில்லியன் பிள்ளைகள் அந்தத் திட்டத்தால் பலனடைந்து வருகின்றனர்.

பெரும்பாலும் நல்ல முறையில் திட்டம் செயல்பட்டுவந்தபோதும், ஆங்காங்கே பள்ளி அதிகாரிகள் மாணவர்களுக்குரிய உணவைக் கொடுக்காமல் ஊழல் செய்வது குறித்துப் புகார்கள் வருவதுண்டு.   

Top