Images
  • relations
    படம்: KCNA via REUTERS

சீனாவுடனான உறவை வளர்த்துக்கொள்வதில் வட கொரியா உறுதி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

அனைத்துலக நிலைமை எப்படி இருப்பினும், சீனாவுடனான தனது உறவை வளர்த்துக்கொள்வதில் உறுதியுடன் இருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே அரசதந்திர உறவு தொடங்கி 70 ஆண்டுகள் ஆகியிருக்கும் வேளையில், வட கொரியாவின் ரொண்டோங் சின்முன் நாளேடு இன்று காலை அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 

வட கொரிய ஆளுங்கட்சியும் அதன் அரசாங்கமும் இரு நாடுகளின் நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உறுதியான விருப்பம் கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவை வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அது கூறியது.

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சீன அதிபர் சி சின்பிங்கை ஐந்து முறை சந்தித்துள்ளார்.

குறிப்பாக, டிரம்ப்-கிம் உச்சநிலை சந்திப்புக்கு முன்னரும்,பிறகும் சீன, வட கொரியத் தலைவர்கள் மூன்று முறை சந்தித்தனர்.

திரு.கிம் மீண்டும் சீன அதிபரைச் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வட கொரியப் பேராளர் குழு சென்ற வாரம் சீனாவின் டாண்டோங் (Dandong) நகருக்கு சென்றது.

திரு. கிம் சீனாவுக்குச் செல்வதற்கான பயண ஏற்பாட்டைக் கவனிக்க அந்தக் குழு அங்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே, வடகொரியாவுடன் நீண்ட காலம், வலுவான, நிலையான உறவைக் கொண்டிருக்க விரும்புவதாகச் சீன அதிபர் சி சின்பிங் கூறியுள்ளார்.


Top