Images
  • patient compensated (1)

அறுவை சிகிச்சைக்கு இடையே கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நோயாளிக்கு இழப்பீடு

ஹாங்காங்: அறுவை சிகிச்சையின் நடுவில் கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நோயாளிக்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக சீன மருத்துவமனை ஒன்று கூறியது.

நோயாளிக்கு அறுவை சிகிச்சை அறையில் மயக்கமருந்து கொடுத்த பின்னர் மீதம் உள்ள கட்டணத்தைச் செலுத்துமாறு மருத்துவர் கூறினார்.

யாவ் என்றழைக்கப்படும் நோயாளி அறுவை சிகிச்சைக்காக அக்டோபரில் சுமார் 100 வெள்ளி கட்டணம் செலுத்தியதாகக் கூறினார். ஆனாலும் அறுவை சிகிச்சையைத் தொடங்கிய பின் சுமார் 3,000 வெள்ளி கூடுதல் கட்டணம் செலுத்துமாறு நோயாளியிடம் கூறப்பட்டது.

வேறு வழியில்லாமல் காயங்களுக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு கீழ் மாடிக்குச் சென்று கட்டணத்தைச் செலுத்தினர். மற்ற மருத்துவமனைகளில் அந்த வகையான சிகிச்சைக்குக் கட்டணம் சுமார் 400 வெள்ளி மட்டுமே.

மருத்துவமனைக்கு எதிராக நோயாளி புகார் செய்தார், சமரச பேச்சுகளுக்குப் பின் இரு தரப்புகளும் இணக்கம் கண்டு நோயாளிக்கு இழப்பீடு கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
 

Top