Images
  • Peng Shuai
    (படம்: AFP/OIS/IOC/ Greg Martin)

டென்னிஸ் வீராங்கனை 'பெங் ஷுவாய் மிரட்டப்பட்டாரா? நலமாக இருக்கிறாரா?'... தொடரும் அக்கறை

சீனாவைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டாளர் பெங் ஷுவாயின் (Peng Shuai) நலன் குறித்து மகளிர் டென்னிஸ் அமைப்பு அக்கறை தெரிவித்துள்ளது.

சுமார் 3 வாரங்களுக்கு முன், அவர் சமூக ஊடகத்தில் சீன முன்னாள் துணைப் பிரதமர் சாங் கவ்லி (Zhang Gaoli) மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, அத்தகைய பதிவுகள் சமூக ஊடகத்திலிருந்து அகற்றப்பட்டன. அவரும் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகச் சமூக ஊடகத்தில் எதையும் பகிரவில்லை.

அவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சீனாவின் நடவடிக்கை திருப்தி அளிக்காவிட்டால், அங்கு இனி விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்போவதில்லை என்று மகளிர் டென்னிஸ் அமைப்பு சீனாவுக்கு நெருக்குதல் அளித்திருந்தது.

பல நாளாக பொதுவெளியில் தோன்றாத பெங், சென்ற சனிக்கிழமை நண்பர்களுடன் உணவருந்துவது, சிறுவர் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வது போன்ற படங்கள் சீன ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

பெங் மிரட்டப்பட்டாரா, அவர் நலமாக இருக்கிறாரா என்பதை அந்தப் படங்கள் பிரதிபலிக்கவில்லை என்று மகளிர் டென்னிஸ் அமைப்பு கூறியது.

அனைத்துலக ஒலிம்பிக் குழுத் தலைவருடன் பெங் காணொளி மூலம் பேசியதால் அவர் நலமாயிருக்கிறார் என்று உறுதி செய்ய முடியாது என அமைப்பு சாடியது.

தமக்குத் தனிமை தேவை என்றும், பெய்ச்சிங் வீட்டில் பாதுகாப்பாய் இருப்பதாவும் பெங் தெரிவித்துள்ளார்.

அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் முழுமையாக, நியாயமான விசாரணை இடம்பெறவேண்டும் என்றும் அமைப்பு வலியுறுத்தியது.

எனினும், பெங்கைப் பேசவிடாமல் அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனரா என்ற சந்தேகமும் அச்சமும் நிலவுகிறது.

- Reuters 

Top