Images
  • ph covid
    (படம்: REUTERS/Eloisa Lopez)

'பிலிப்பீன்ஸில் சுகாதாரக் கட்டமைப்பு முடங்கும் அபாயம்': COVID-19 கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்த சுகாதாரத்துறை ஊழியர்கள் கோரிக்கை

பிலிப்பீன்ஸின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு முற்றாக முடங்கும் ஆபத்தை எதிர்நோக்குகிறது என்று பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் தாதியரும் எச்சரித்துள்ளனர்.

நாட்டில், கிருமிப்பரவல் வெகுவாக அதிகரித்துவரும் வேளையில், கட்டுப்பாடுகள் மீண்டும் செயல்படுத்தப்படவேண்டும் என்று அவர்கள் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டேயிடம் (Rodrigo Duterte) கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மில்லியன் தாதியர், 80,000 மருத்துவர்கள் ஆகியோரின் சார்பில் 80 குழுக்கள் திரு. டுட்டார்ட்டேக்குக் கடிதம் அனுப்பியுள்ளன.

அதில், மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதால் சுகாதார ஊழியர்கள் சோர்வடைந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிலிப்பீன்ஸ் தோல்வியை எதிர்நோக்குகிறது என்றும் அது கூறியது.

கிருமித்தொற்றுக்கு எதிரான பணிக்குழுவின் எதிர்வரும் கூட்டங்களில் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்று அதிபர் மாளிகை கூறியது.

இருப்பினும், முடக்க நடவடிக்கைகள் மட்டும் போதா என்று அது சொன்னது.

பொதுச் சுகாதாரத்திற்கும் நாட்டின் பொருளியலுக்கும் சமநிலை அளிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அதிபர் மாளிகை தெரிவித்தது. 

Top