Images
  • Pink Chocolate
    தோக்கியோ கடை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள செயற்கை கொக்கோ கொட்டைகளும், புதிய ரக இளஞ்சிவப்பு சாக்லெட்டும். (படம்:AFP/Behrouz Mehri)

காதலின் நிறம் இளஞ்சிவப்பு, சுவை இனிப்பு.

இந்த ஆண்டு அன்பர் தினத்தில் அன்பை வெளிப்படுத்த ஜப்பானியர்களுக்கு வித்தியாசமான வாய்ப்பு.

உலகின் முதல் இயற்கையான இளஞ்சிவப்புச் சாக்லெட்டைக் காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழலாம்.

தோக்கியோவின் கின்ஸா(Ginza) வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள கிட்கேட்(KitKat) கடை முழுக்க முழுக்க இளஞ்சிவப்பாய் ஜாலம் காட்டுகிறது.

புதிய ரக சாக்லெட்டின் விற்பனையைப் பெருக்கும் முயற்சியாக, கடையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இளஞ்சிவப்புச் சாக்லெட் மட்டுமே கண்ணை நிறைக்கிறது.

விற்பனைத் துறையினர் புத்திசாலித்தனமாக இந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜப்பானில், அன்பர் தினத்துக்குப் பெண்கள் தங்கள் மனங்கவர்ந்த ஆண்களுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம்.

பெண்களுக்குப் பெரும்பாலும் பிடித்த நிறம் இளஞ்சிவப்பு. பிடித்த இனிப்புவகையோ சாக்லெட்.



அந்த அடிப்படையில் அன்பர் தின வாய்ப்பைச் சிக்கெனப் பற்றிக்கொண்டனர் சாக்லெட் விற்பனையாளர்கள்.

சிறிது காலம் முன்புவரை சாக்லெட்களில் மூன்று ரகங்கள் மட்டுமே. 80 ஆண்டுக்கு முன்னர் அறிமுகம் கண்டது மூன்றாவது ரகமான வெள்ளைச் சாக்லெட்.

அண்மை அறிமுகமான இளஞ்சிவப்பு சாக்லெட்டின் நிறம் இயற்கை முறையில் பெறப்பட்டது.

ராஸ்ப்பெர்ரி பழச் சுவையுடன், பாலேட்டின் சுவையும் கலந்த கலவையாய் தித்திக்கிறது அந்தச் சாக்லெட்.

அதன் செய்முறையை ரகசியமாகப் பத்திரப்படுத்தியுள்ளது நிறுவனம்.

யார் கண்டது ? அன்பை வெளிப்படுத்த நினைப்போர் ஜப்பானுக்குப் பயணம் செய்யவும் திட்டமிடலாம்.


 

உங்கள் கருத்து

Top