Images
  • pregnant cat (1)

சலவை இயந்திரத்துக்குள் போட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பமான பூனை - இருவர் கைது

மலேசியாவில் சலவையகம் ஒன்றிலுள்ள இயந்திரத்துக்குள், கர்ப்பமான பூனையைப் போட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டதாக Facebookஇல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு சந்தேக நபரைத் தேடிவருவதாகக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

சலவையகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு ஆடவர்கள் பூனையைச் சலவை இயந்திரத்துக்குள் வைப்பது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இயந்திரத்துக்குள் பூனையை வைத்து கதவுகளை அடைத்த பிறகு அங்கிருந்து சென்றோர் சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்பியுள்ளனர். இயந்திரத்துக்குள் காசுகளைப் புகுத்தி அதனைச் செயல்படச் செய்தனர்.

இயந்திரத்துக்குள் பூனை சுழல்வதை ஆடவர்கள் பார்த்துக்கொண்டு நின்றனர்.

இயந்திரத்துக்குள் அசைவின்றி கிடந்த பூனையின் படத்தையும் சந்தேக நபர்களின் படத்தையும் மலேசிய விலங்கு நலச் சங்கம் பதிவேற்றம் செய்திருந்தது.

சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தச் சென்ற வாடிக்கையாளர் உள்ளே செத்துக்கிடந்த பூனை குறித்து தகவல் அளித்திருக்கிறார்.

அந்தக் குற்றச்செயலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரின் படங்களைக் காவல்துறையினர் நேற்று வெளியிட்டிருந்தனர்.

மலேசியாவில் விலங்கு வதையில் ஈடுபடுவோருக்கு, அபராதமோ, மூன்றாண்டு வரை சிறைத்தண்டனையோ, இரண்டையும் சேர்த்தோ விதிப்பதற்குச் சட்டத்தில் இடமுண்டு.  

Top