Images
  • soup
    (படம்: Weibo)

கொதிக்கும் சூப்பில் மிதக்கும் எலியைக் கண்டுபிடித்த கர்ப்பிணி

சீனாவிலுள்ள ஓர் உணவகத்தில் Hotpot எனும் சூப் வகையைச் சாப்பிடக் குடும்பத்தோடு சென்றிருந்தார் கர்ப்பிணி ஒருவர்.

ஓரிரு வாய் அந்த சூப்பை அருந்தியபிறகே அதில் செத்த எலி ஒன்று மிதப்பதைக் கண்டார் அவர்.

Xiabu Xiabu என்னும் தொடர் உணவகக் கிளையொன்றில் அந்தச் சம்பவம் நேர்ந்தது.

செத்த எலியைப் படம் பிடித்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.

இணையத்தில் வெகுவாகப் பரவிய பதிவு உணவகத்தின்மீது அருவருப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

பெண்ணுக்கு இழப்பீடாக சுமார் 729 டாலர் கொடுக்க உணவகம் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் மனைவி முழு உடல் நலப் பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் இழப்பீட்டை நிர்ணயிக்கலாம் என்றார் அவரது கணவர்.

செத்த எலி ஏதேனும் ஒரு வகையில் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கக் கூடுமென கர்ப்பிணி அஞ்சியதால், விரும்பினால் கருவைக் கலைப்பதற்கென உணவக ஊழியர் சுமார் 3,000 டாலர் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தத் தகவல், இணையவாசிகளுக்கு மேலும் சினமூட்டியது.

ஓர் உயிரின் விலை 3000 டாலர்தானா என்று சிலர் சினத்துடன் கேள்வி எழுப்பியிருந்தனர்.

கடந்த வாரம் நடந்த அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அந்தத் தொடர் உணவகத்தின் பங்கு மதிப்பு, கிடுகிடுவெனச் சரிந்தது.

சில நாட்களில் மட்டும் அந்த நிறுவனப் பங்குகளின் மதிப்பு, சுமார் 190 மில்லியன் சரிந்தது.

தொடக்கத்தில் அந்தச் சம்பவத்துக்கு உணவகத்தின் தூய்மைக் குறைபாடு ஒரு காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என உணவக நிர்வாகம் அறிக்கையொன்றை வெளியிட்டது.

பின்னர் அந்த அறிக்கையை உணவகம் மீட்டுக்கொண்டது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உணவகக் கிளையில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகச் சீன ஊடகங்கள் குறிப்பிட்டன. 

Top