Images
  • SA prince
    படம்: AFP

சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் சீனாவிற்கு 2 நாள் அதிகாரத்துவப் பயணம்

சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், சீனாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆசியப் பொருளியலுக்கு உந்துசக்தியாக விளங்கும் நாடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் சவுதி அரேபியா இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இளவரசர் மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீனா, சவுதி அரேபியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி. சவுதியின் கச்சா எண்ணெயை ஆக அதிக அளவில் வாங்கும் நாடு, சீனா.

ரியாத் கச்சா எண்ணெய் வருவாயை அதிகம் சார்ந்திருக்கிறது. அதைத் தாண்டி தனது பொருளியலை விரிவுபடுத்தும் நோக்கில், சீன நிறுவனங்களை அது ஈர்க்க முற்பட்டிருக்கிறது.

பட்டத்து இளவரசரும், சீன அதிபர் சி சின்பிங்கும் சந்தித்துப் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலையின் தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கம் மேற்கத்திய நாடுகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், பொருளியல் உறவுகளை ஆசியாவில் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


 

Top