Images
  • school malaysia
    (படம்: AFP)

கையேந்தும் சிறுமியைப் பள்ளிக்கு மீண்டும் அனுப்பப் பாடுபடும் உன்னத ஆசிரியர்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பணியைத் தாண்டி ஒரு சிறுமியின் நலனுக்காகப் பாடுபடும் ஆசிரியர் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அது குறித்து Malay Mail இணையத்தளம் விவரித்திருந்தது.

பிள்ளைகள் என்றாலே எப்போது நேரம் கிடைக்கும், எப்போது விளையாடச் செல்லலாம் என்று தவிப்பார்கள்.

ஆனால் 9 வயதுச் சிறுமி ஒருவர், தன் குடும்பச் சூழல் காரணமாக சாலைகளில் டிஷ்யூ தாள்கள் விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார்.

சிறுமியின் நிலையை அறிந்த ஃபாட்லி என்ற ஆசிரியர் பதறிப்போனார். பிஞ்சு வயதில் குடும்ப பாரம் சுமக்கும் சிறுமியின் நிலைமையைத் தெரிந்துகொண்டார்.

சிறுமியின் தாயாருக்குப் பார்வைக் குறைபாடு.... மூத்த சகோதரிகள் இருவருக்கும் சில பிரச்சினைகள்... மேலும் சிறுமியின் குடும்பத்தில் சொல்ல முடியாத பல சிக்கல்கள் இருப்பதாக ஆசிரியர் சொன்னார்.

சிறுமியின் நிலை குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டார் அவர்.

சிறுமியின் குடும்பத்துக்கு சமூக நல அமைப்புகள் பல உதவிகளைச் செய்கின்றன. இருப்பினும், இந்த ஆண்டுக்கான உதவிகள் இன்னும் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன என்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல் ஆசிரியர், பிரபல சமூக நல ஆர்வலரின் உதவியை நாடியுள்ளார். அவரது ஆலோசனைப்படி குடும்பத்துக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து வருகிறார்.

ஆசிரியரின் ஒரே நோக்கம், அந்தச் சிறுமி கை ஏந்தக்கூடாது, மீண்டும் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதே.

ஆசிரியரின் சமூக ஊடகப் பதிவு பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக Malay Mail தெரிவித்தது.

சிறுமியின் நிலையறிந்து பரிதாபப்பட்ட பலர், ஆசிரியரின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க உறுதியளித்துள்ளனர். 

Top