Images
  • SK Building Collapsed 9 dead
    படம்: Chung Hoi-sung/Yonhap via AP

தென் கொரியாவில் தகர்க்கும் வேளையில் இடிந்துவிழுந்த கட்டடம் - 9 பேர் மரணம்

தென் கொரியாவில் கட்டடம் ஒன்று தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இடிந்துவிழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமுற்றனர்.

தென் கொரியத் தலைநகர் சோலிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாங்ஜூ(Gwangju) எனும் நகரில் சம்பவம் நடந்தது.

அங்குள்ள கட்டடம் ஒன்று கட்டுமானத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தகர்க்கப்பட்டது. அவ்வேளையில், எதிர்பாராவிதமாக அந்த 5 மாடிக் கட்டடம் திடீரென்று இடிந்து, முக்கிய சாலையில் விழுந்ததாக உள்ளூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

கட்டடம் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தளத்துக்கு அருகில் இருந்த பேருந்து ஒன்று புதையுண்டது.

தென் கொரியாவின் உள்கட்டமைப்பு வசதிகளின் பாதுகாப்பு ஒரு காலத்தில் குறைகூறப்பட்டுவந்தது.

இருப்பினும் அண்மை ஆண்டுகளில் அதன் கட்டடப் பாதுகாப்புத் தரத்தை உயர்த்த தென் கொரியா முயற்சிகள் மேற்கொண்டது.  

Top