Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை: $11 பெறும் முயற்சியில் கூட்டத்தில் மிதிபட்டு மாண்ட 3 பெண்கள்

இலங்கையில் 1,500 ரூபாய் (11 வெள்ளி) நன்கொடையைப் பெறத் திரண்ட கூட்டத்தில் சிக்கி, மூன்று பெண்கள் மிதிபட்டு மாண்டனர்.

வாசிப்புநேரம் -
இலங்கை: $11 பெறும் முயற்சியில் கூட்டத்தில் மிதிபட்டு மாண்ட 3 பெண்கள்

(படம்: AFP/STR)

இலங்கையில் 1,500 ரூபாய் (11 வெள்ளி) நன்கொடையைப் பெறத் திரண்ட கூட்டத்தில் சிக்கி, மூன்று பெண்கள் மிதிபட்டு மாண்டனர்.

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள முடக்கநிலையால், பொருளியல் நிலைகுலைந்துள்ளது. அன்றாட வாழ்க்கைச் செலவை ஈடுகட்டவே, பலரும் தவித்து வருகின்றனர்.

நோன்பு மாதத்தை முன்னிட்டு தொழிலதிபர் ஒருவர் ஆண்டுதோறும் வழங்கும் 1,500 ரூபாய் நன்கொடையைப் பெறச் சுமார் 1,000 பேர் காத்திருந்தனர்.

அது ஒரு தினக்கூலி ஊழியரின் ஒருநாள் சம்பளத்துக்குச் சமமான தொகை.

ஒரு சரக்குக் கிடங்கில் வழங்கப்பட்ட நன்கொடையை வாங்க, அதன் வெளியே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

கிடங்கின் கதவு திறந்ததும், ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, வரிசையில் முதலில் நின்றிருந்த பெண்கள் சிலர் கீழே விழுந்தனர்.

மற்றவர்கள் அவர்கள் மீது ஏறி ஓடியதில் மூச்சுத் திணறி 3 பெண்கள் மாண்டனர். மேலும் ஒன்பது பேர் காயமுற்றனர். அவர்கள், மருந்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

பத்தாண்டுகளுக்கும் மேல் அந்தத் தொழிலதிபர் இதுபோல் நன்கொடை வழங்கிவருகிறார்.
இவ்வாண்டு அதைப்பெற, அதிகக் கூட்டம் திரண்டாகக் கூறப்பட்டது.

முடக்கநிலையின் காரணமாகப் பலரும் கடந்த இரு மாதங்கள் வேலையின்றி இருப்பது அதற்கு முக்கியக் காரணம் என்பதை AFP செய்தி நிறுவனம் சுட்டியது.

முடக்கக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக, தொழிலதிபரும் அவரின் உதவியாளர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடுமையான வறுமையில் வாடும் சுமார் 5 மில்லியன் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் இம்மாதம் 5,000 ரூபாய் ( 38 வெள்ளி) வழங்கியது.

அப்போதும் சில இடங்களில் இதுபோன்ற நெரிசல் ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களையும் தவிர மற்ற சில இடங்களில் முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் 1,045 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்