Images
  • same sex marriage
    (படம்: AFP/Daniel Shih)

ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியது தைவான்

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

தைவானிய நாடாளுமன்றம், ஓரினத் திருமணத்திற்குச் சட்டரீதியான அனுமதியை வழங்கியுள்ளது.

ஆசியாவில், இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது இதுவே முதன்முறை.

கடந்த சில காலமாகவே தைவானில் ஓரினத் திருமணத்திற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதனையடுத்து அதை விசாரித்த தைவானிய உச்சநீதிமன்றம், ஓரினத் தம்பதி திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.

அது தொடர்பான மாற்றங்களைச் செய்ய, அரசாங்கத்துக்கு நீதிமன்றம் இம்மாதம் 24ஆம் தேதி வரை கெடுவிதித்தது.

ஆனால் அதை எப்படிச் செய்வது என்பது குறித்து நீதிபதிகள், வழிகாட்டுதல் எதனையும் வழங்கவில்லை.

இருப்பினும், ஓரினத் தம்பதி "தனிப்பட்ட நிரந்தரமான பிணைப்பை" ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை, தைவானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதே சட்டத்தின் இரண்டாம் பிரிவு, ஓரினத் தம்பதி திருமணப் பதிவுக்கு விண்ணப்பிப்பதை அனுமதிக்கிறது.

இருப்பினும், "திருமணம்" என்ற வார்த்தையைத் தைவானிய நாடாளுமன்றம் தனது சட்டத்தில் கவனமாகத் தவிர்த்துவிட்டது.

மேலும் ஓரினத் தம்பதிக்கான குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையிலும் அது சில கட்டுப்பாடுகளை விதித்தது.

ஓரின உறவை ஆதரிக்கும் குழுக்கள், அதை முழுமையாக ஆதரிக்கவில்லை.

இருப்பினும், ஆண்-பெண் தம்பதிக்கு நிகராகக் கிடைத்துள்ள ஆகச் சிறந்த அங்கீகாரம் இதுவென்பதால் இதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டன.

 

Top